மயிலாடுதுறை அருகே மூன்று வயது சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்ததாக 16 வயது சிறுவன் கைது செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
கடந்த சில நாட்களாகவே தமிழகத்தில் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் தொல்லை அதிகரித்து வருவதை அடுத்து காவல்துறையினர் இது குறித்து கடும் நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.
இந்த நிலையில் மயிலாடுதுறை மாவட்டத்தில் உள்ள கூலி வேலை செய்யும் தொழிலாளி ஒருவரின் மூன்று வயது சிறுமி நேற்று அருகில் உள்ள அங்கன்வாடிக்கு சென்றுள்ளார்.
மதிய உணவு சாப்பிட்ட பின் அவர் கை கழுவ சென்றபோது திடீரென காணவில்லை என்று தெரிகிறது. இதனை அடுத்து ஆசிரியர்கள் மற்றும் அங்கன்வாடி பணியாளர்கள் சிறுமியை தேடிய நிலையில் ஆளில்லா பகுதியில் குழந்தையின் அழுகை சத்தம் கேட்டது.
அங்கு சென்று பார்த்தபோது தலை மற்றும் முகத்தில் காயங்களுடன் உயிருக்கு போராடிய நிலையில் சிறுமி இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். இதையடுத்து காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து சிறுமியை மீட்டு தங்களது சொந்த செலவில் சிகிச்சைக்காக அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.
பின்னர் இது குறித்து விசாரணை செய்தபோதுதான் அதே பகுதியில் வசிக்கும் 16 வயது சிறுவன் தான் இந்த சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்தது தெரிய வந்தது. அதனை அடுத்து மகளிர் போலீசார் சட்டத்தின் கீழ் சிறுவன் மீது வழக்கு பதிவு செய்து கைது செய்ததோடு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி உள்ளனர். மூன்று வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.