காஞ்சிபுரத்தில் 200 கிலோ குட்கா சிக்கியது

Webdunia
செவ்வாய், 2 அக்டோபர் 2018 (17:08 IST)
காஞ்சிபுரம் பேருந்துநிலையத்தில் வெளிமாநில பஸ்களின் மூலம் கடத்தப்பட்ட குட்கா பொருட்கள் கைப்பற்றப்பட்டுள்ளன.

தமிழகத்தில் தடை செய்யப்பட்ட குட்கா, பான் பொருள்கள் தடையை மீறி விற்பனை நடைபெற்றுக் கொண்டிருப்பதாக குற்றச்சாட்டு எழுந்ததை அடுத்து கடந்த வருடம் ஜூன் மாதம் குட்கா குடோனில் வருமான வரித்துறை அதிகாரிகள் அதிரடி சோதனை நடத்தினர்.அப்போது அங்கு சிக்கிய டைரி ஒன்றில் குட்கா விற்பனையை கண்டுக் கொள்ளாமல் இருக்க சுகாதார துறை அமைச்சர் விஜயபாஸ்கர், டி.ஜி.பி ராஜேந்திரன், சென்னை போலீஸ் ஆணையராக இருந்த ஜார்ஜ் ஆகியோருக்கு ரூ.40 கோடிக்கு லஞ்சம் கொடுக்கப்பட்டதாக குறிப்பிடப்பட்டிருந்தது. 

இந்த விவகாரம் பூதாகரம் ஆகியது. எனவே, லஞ்ச ஒழுப்புத்துறை இதை விசாரித்து வந்தது. ஆனால், இந்த விவகாரத்தை கையில் எடுத்த திமுக நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது. சென்னை உயர் நீதிமன்றத்தில் திமுக எம்.எல்.ஏ அன்பழகன்  இந்த வழக்கை தொடர்ந்தார். மேலும், இந்த வழக்கை சிபிஐ விசாரிக்க வேண்டும் எனவும் மனு தாக்கல் செய்யப்பட்டது.

இது தொடர்பாக அமைச்சர் விஜயபாஸ்கர் மற்றும் டிஜிபி ராஜேந்திரன் மற்றும் முன்னாள் காவல் ஆணையர் ஜார்ஜ் ஆகியோர் உள்ளிட்ட பல அதிகாரிகளின் வீடுகளில் சிபிஐ சோதனை நடத்தியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

இவ்வழக்கில் குட்கா நிறுவன உரிமையாளர் மாதர ராவ், கலால் வரி அதிகாரி பாண்டியன் மற்றும் உணவு பாதுகாப்புத் துறை அதிகாரி சிவக்குமார் உள்ளிட்ட 5 பேர் கைது செய்யப்பட்டு விசாரிக்கப்பட்டு வருகின்றனர்.

இவ்வளவுக்குப் பிறகும் தமிழகத்தில் குட்கா வியாபாரம் நடைபெற்று கொண்டுதான் இருக்கிறது என்பதை உறுதிப்படுத்தும் விதமாக சென்னையை அடுத்த காஞ்சிபுரத்தில் ஒரு சம்பவம் நடந்துள்ளது. காஞ்சிபுரம் பேருந்து நிலையத்தில் சோதனை மேற்கொண்ட போலிஸார் அங்கு வெளிமாநிலங்களில் இருந்து வரும் பேருந்துகளில் இருந்து 8 மூட்டைகளில் 200 கிலோ எடையுள்ள  குட்கா பொருட்களை கைப்பற்றியுள்ளனர்.

இதுகுறித்து வழக்குப் பதிந்துள்ள சிவகாஞ்சி போலீஸார் விசாராணைய மேற்கொண்டு வருகின்றனர்.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்