எடப்பாடி பழனிச்சாமி தமிழக முதல்வராக பதவியேற்ற பின்னரும் அதிமுகவில் நிலவி வரும் குழப்பம் சரியாகவில்லை. நாளை சட்டசபையில் பெரும்பான்மையை எடப்பாடி பழனிச்சாமி நிரூபிக்க வேண்டும் ஆனால் பெரும்பான்மையை நிரூபிக்கும் அளவுக்கு எம்எல்ஏக்கள் ஆதரவு அவருக்கு இல்லை என கூறப்படுகிறது.
கூவத்தூரில் இருந்து இன்னமும் எம்எல்ஏக்கள் அதிமுக கட்டுப்பாட்டில் இருந்து வெளியேற முடியாத சூழல் தான் நிலவி வருகிறது. அதில் 18 எம்எல்ஏக்கள் எடப்பாடி பழனிச்சாமியை எதிர்த்து வருகின்றனர். இந்த 18 எம்எல்ஏக்களும் எடப்பாடி பழனிச்சாமிக்கு வாக்களிக்கவில்லை என்றால் அவரது அரசு கவிழும் அபாயம் ஏற்படும்.
நேற்று எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் புதிய அமைச்சரவை பதவியேற்ற போது அதிமுக எம்எல்ஏக்கள் கலந்து கொண்டனர். ஆனால் 18 எம்எல்ஏக்கள் மட்டும் கலந்து கொள்ளவில்லை. அவர்களை கூவத்தூர் ரிசார்ட்டிலேயே தனியார் பாதுகாப்பு குழுவினர் பாதுகாப்பில் வைத்திருந்தனர்.
இதனால் இந்த எம்எல்ஏக்களை சமாதானம் செய்யும் முயற்சியில் அதிமுக முன்னணி நிர்வாகிகள் ஈடுபட்டுள்ளனர். ஆனால் 18 எம்எல்ஏக்களும் முரண்டு பிடித்து வருகின்றனர். இவர்கள் நாளை வாக்கெடுப்பின் போது எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக பகிரங்கமாக ஓபிஎஸ்ஸுக்கு ஆதரவு தெரிவித்தாலோ அல்லது நடுநிலையாக யாருக்கும் வாக்களிக்காவிட்டாலோ அது எடப்பாடிக்கு பெரும் தலைவலியாக அமைந்துவிடும்.