திமுக-அதிமுக; நடிகை விந்தியா-குஷ்பு மோதல்!

Webdunia
புதன், 9 ஏப்ரல் 2014 (11:15 IST)
நடிகை குஷ்பு திமுக வேட்பாளர்களை ஆதரித்து பிரச்சாரம் செய்து வருகையில் நடிகை விந்தியா அதிமுக வேட்பாளர்களை ஆதரித்து பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளார்.

 
கரூர் பாராளுமன்றத் தொகுதியில் அதிமுக வேட்பாளர் தம்பி துரையை ஆதரித்து விந்தியா பிரச்சாரம் செய்தார். பிரச்சாரத்திற்கு முன்பு செய்தியாளர்களை சந்தித்த விந்தியா கூறியதாவது:
 
2011-ம் ஆண்டு தமிழக மக்கள் எவ்வாறு தேர்தலுக்காக காத்து இருந்தார்களோ, அதே போன்று தற்போது பாராளுமன்ற தேர்தலுக்கு மக்கள் எழுச்சியுடன் காத்து இருக்கிறார்கள். மத்திய காங்கிரஸ் ஆட்சியை கீழே இறக்க வேண்டும் என்பதில் தமிழக மக்கள் மிகவும் தெளிவாக இருக்கிறார்கள். 

கரூர் தி.மு.க. வேட்பாளருக்கு ஒருவாய்ப்பு கொடுங்கள் என்று நடிகை குஷ்பு கூறியிருக்கிறார். சினிமாவில் சைடு ரோலில் நடிப்பதற்கு வாய்ப்பு கொடுங்கள் என்பது போல் பேசி இருக்கிறார்.
 
பாராளுமன்ற உறுப்பினர் என்பது நாட்டு மக்களுக்கும், தொகுதி மக்களுக்கும் சேவை செய்யக்கூடியவராக இருக்க வேண்டும். தி.மு.க. வேட்பாளர் சின்னசாமி அமைச்சராக இருந்த போது கரூர் மக்களுக்கு எதுவும் செய்யவில்லை. அவரை எப்படி மக்கள் தேர்ந்தெடுப்பார்கள். 
 
நடிகை குஷ்பு தற்போது நாட்டில் கொலை, கொள்ளை அதிகம் நடந்துள்ளது என்று பேசி உள்ளார். அவர் உண்மையை பேச வேண்டும். நாட்டில் என்ன நடக்கிறது என்று தெரிந்து பேச வேண்டும்.தி.மு.க. ஆட்சியில் 638 பாலியல் கொடுமை வழக்குகள் பதிவு செய்யப்பட்டு இருந்தன. 
 
தற்போது அ.தி.மு.க. ஆட்சியில் 313 வழக்குகள் தான் பதிவாகி உள்ளன. அதாவது 50 சதவீதம் குறைந்து உள்ளது. தேசிய குற்ற ஆவண அறிக்கை படி தமிழ்நாட்டில் பெண்களுக்கு எதிரான கொடுமைகள் குறைந்து உள்ளன என்று கூறியுள்ளது. 
 
தமிழ்நாட்டில் தற்போது அனைத்து குற்றங்களும் குறைக்கப்பட்டு உள்ளன. சட்டம்-ஒழுங்கு தமிழ்நாட்டில் சிறப்பாக உள்ளது. எனவே பாராளுமன்ற தேர்தலில் 40 தொகுதிகளிலும் அ.தி.மு.க. வெற்றி பெறும். 
 
இவ்வாறு நடிகை விந்தியா கூறினார்.