கோடையில் வெயிலினால் ஏற்படும் பிரச்னைகளும் தீர்வுகளும்!

Webdunia
வியாழன், 26 மே 2022 (00:14 IST)
கோடை காலத்தில்தான் நம்ம உடலில் உள்ள தேவையில்லா கழிவெல்லாம் வெளியேறும். வெயிலின் உச்சத்தால உடலின்  நீர்ச்சத்து அதிகளவு வெளியேறுவதால சில பிரச்னைகளும் ஏற்படும்.
 
கறுத்த முகம்
 
சூரியனின் புறஊதா கதிர்கள், நம் சருமத்தில் ஊடுருவுவதால், நிறமியை உற்பத்திச் செய்யும் மெலனினை அதிகரிக்கச்  செய்கிறது. இதனை போக்க வெயிலில் சென்று வந்தவுடன் தக்காளிச் சாற்றுடன் தயிர் கலந்து முகத்தில் அப்ளை செய்து, பத்து  நிமிடம் கழித்து கழுவவும்.
 
கேலமைன் ஐ.பி லோஷனை, தினமும் இரவில் முகத்தில் அப்ளை செய்து, பத்து நிமிடம் கழித்து கழுவவும். இந்த இரண்டுமே,  அன்றைய கறுமையை அன்றே போக்கி, இயல்பான நிறத்தை தக்கவைக்கும்.
 
வியர்க்குரு
 
கோடையில் அதிகளவு வெளியேறும் வியர்வையால் உடலின் நீர்ச்சத்து குறைவதால், உடல் சூடாகும். சூடு பொறுக்காமல்  சருமத்தில் ஏற்படும் சிறுசிறு பொரிகள்தான் வியர்க்குரு. இதை கவனிக்காமல் விட்டாலோ, சொறிந்தாலோ நிரந்தர  கரும்புள்ளிகள் தோன்றும். வியர்க்குருவைக் குறைக்க, நுங்கை தோலின் மீது தேய்க்கலாம்.
 
பத்து மில்லி தேங்காய்ப்பாலில், ஒரு ஸ்பூன் கசகசாவை ஊறவைத்து அரைத்து, அந்த பேஸ்ட்டை பூசலாம். ஐந்து சின்ன  வெங்காயத்தின் சாறெடுத்து, அதில் ஒரு சிட்டிகை ஆப்ப சோடா மாவு போட்டால் நுரைத்து வரும். அந்த நுரை அடங்கும் முன்  கலவையை வியர்க்குருவின் மேல் தேய்த்தால், இரண்டு மணி நேரத்தில் வியர்க்குரு பொரிந்துவிடும்.
 
சன் பர்ன்
 
சிலருக்கு வெயிலில் சென்று வந்தால் சருமம் சிவந்துவிடும். இதைச் சரிசெய்யாவிட்டால், மங்கு ஏற்பட்டு முகத்திலேயே  நிரந்தரமாகத் தங்கிவிடும். எனவே, வெள்ளரி, தர்பூசணி அல்லது பூசணி இவற்றில் ஏதாவது ஒன்றின் விதையை, சுத்தமான  பன்னீரில் ஊறவைத்து, விழுதாக அரைத்து, இதனுடன் இரண்டு சொட்டுகள் லேவண்டர் ஆயில் கலந்து, சன் பர்ன் ஆன  இடங்களில் தடவி, அரைமணி நேரம் கழித்து கழுவவும்.
 
அக்கி மற்றும் அம்மை
 
கோடை பிரச்னைகளில் அதிக பாதிப்பு ஏற்படுத்துவது, அக்கி மற்றும் அம்மை. கோடை காரணமாக உடலின் நீர்ச்சத்து  வெளியேற்றம், கூடவே அதிக தண்ணீர், பழங்கள் எடுக்காமல் இருப்பது, எண்ணெய் காரம் அதிகம் சேர்த்துக்கொண்டால், உடல்  மேலும் சூடாகி, அம்மை மற்றும் அக்கி ஏற்படுகிறது.
 
அம்மைத் தழும்புகள் மறைய
 
அம்மை நோய் போய்விட்டாலும், சிலருக்கு கரும்புள்ளிகள் மற்றும் தழும்பு இருக்கும். சோளமாவு கால் டீஸ்பூன், பட்டையின் பொடி ஒரு சிட்டிகை, ஜாதிக்காய் பொடி ஒரு சிட்டிகை எடுத்துக்கொள்ள வேண்டும். இதில் சிறிது மோர் விட்டு, பேஸ்ட் போல்  குழைத்து, தழும்புகள் உள்ள இடத்தில் தடவி, பத்து நிமிடம் கழித்து கழுவிவிட வேண்டும். இதைத் தொடர்ந்து 30 நாட்களுக்கு தவறாமல் செய்தாலேபோதும், தழும்புகள் தடம் தெரியாமல் போகும்.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்