நீதிபதி ரவிராஜபாண்டியன் குழு நிர்ணயிக்கப்பட்ட கட்டணத்தை மட்டுமே வசூலிக்கிறார்களா? என்று பள்ளி நிர்வாகத்தை கண்காணிப்பதற்கு ஒரு நபர் குழுவை தமிழக அரசு அமைக்க உத்தரவிட கோரி சென்னை உயர் நீதிமன்றம் வழக்கு தொடப்பட்டுள்ளது.
வழக்கறிஞர் எம்.சேக் முகமது அலி தாக்கல் செய்த பொதுநலன் மனுவில், தனியார் பள்ளி கட்டணங்களை வரைமுறைப்படுத்துவதற்காக நீதிபதி கோவிந்தராஜன் தலைமையில் குழு அமைத்து அரசு பரிந்துரை கேட்டது. அந்த குழு அளித்த பரிந்துரைகளை பல பள்ளிகள் ஏற்கவில்லை. இந்த நிலையில் நீதிபதி கோவிந்தராஜன் பதவி விலகினார். அந்த இடத்தில் நீதிபதி ரவிராஜபாண்டியன் நியமிக்கப்பட்டார்.
பள்ளி கட்டண விவகாரத்தில் கடந்த ஜூன் 2ஆம் தேதி மதுரை உயர் நீதிமன்ற கிளை தீர்ப்பு அளித்தது. அதில், கோவிந்தராஜன் குழு நிர்ணயித்த கட்டணத்தை மட்டுமே தனியார் பள்ளிகள் வாங்க வேண்டும் என்று அதில் குறிப்பிடப்பட்டு இருந்தது.
ஆனால் இதை பின்பற்றாத பள்ளிகளின் முன்பு மாணவர்களும், பெற்றோர்களும் போராட்டம் செய்வது தொடர்ந்து கொண்டிருக்கிறது. கட்டணத்தை வசூல் செய்வதில் கண்காணிப்பு தேவை. நிர்ணயிக்கப்பட்ட கட்டணத்தை மட்டுமே வசூலிக்கிறார்களா? என்று பள்ளி நிர்வாகத்தை கண்காணிப்பதற்கு ஒரு நபர் குழுவை அரசு அமைக்க வேண்டும்.
கூடுதல் கட்டணத்தை நேரடியாகவோ அல்லது மறைமுகமாவோ வசூலித்தால், அதுபற்றி விசாரணை நடத்தி அந்த பள்ளி நிர்வாகிகளை தண்டனைச் சட்டங்களில் கீழோ அல்லது லஞ்ச ஊழல் தடை சட்டத்தின் கீழோ தண்டிக்க வகை செய்ய வேண்டும்.
நிர்ணயிக்கப்பட்ட கட்டணத்தை எப்படி வசூல் செய்ய வேண்டிய முறை இன்னும் வகுத்தளிக்கப்படவில்லை. ஒரு ஆண்டுக்கான கட்டணம் முழுவதையும் ஒரே நாளில் செலுத்த வேண்டுமா? அல்லது அரையாண்டு, காலாண்டு என்று பிரித்து கட்ட வேண்டுமா? என்பதில் தெளிவான நிலையில்லை.
இந்த நடைமுறைகளை பின்பற்றாத பள்ளி நிர்வாகத்தை தண்டிக்க என்ன நடவடிக்கை எடுக்கப்படும் என்பதிலும் தெளிவு இல்லை. இதுபற்றி எடுத்துரைத்து அரசுக்கு 7.6.11 அன்று மனு கொடுத்தேன். அந்த மனு மீது அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. எனவே எனது மனு மீது உரிய நடவடிக்கை எடுக்க அரசுக்கு உத்தரவிட வேண்டும் என்று மனுவில் கூறியுள்ளார்.
இந்த மனுவை விசாரித்த தலைமை நீதிபதி எம்.ஒய்.இக்பால், நீதிபதி டி.எஸ்.சிவஞானம் ஆகியோர், இது தொடர்பாக அரசின் அறிவுரையை பெற்று 2 வாரத்துக்குள் பதில் மனு தாக்கல் செய்ய வேண்டும் என்று நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
மேலும் நீதிபதி ரவிராஜபாண்டியனின் அறிக்கையை அமல்படுத்துவதற்கு இதுவரை அரசு மேற்கொண்ட நடைமுறைகளை பற்றி விளக்கம் அளிக்க வேண்டும் என்றும் நீதிபதிகள் ஆணையிட்டனர்.