டி.ஜி.எஸ்.தினகரன் பெயர் வைப்பதை கண்டித்து இந்து முன்னணி நாளை ஆர்ப்பாட்டம்
செவ்வாய், 3 மார்ச் 2009 (12:31 IST)
சென்னை அடையாறு கிரீன்வேஸ் சாலைக்கு டி.ஜி.எஸ். தினகரன் பெயர் வைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து நாளை ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என்று இந்து முன்னணி அமைப்பாளர் இராம. கோபாலன் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், பழமையான கிரீன்வேஸ் ரோடு என்பதை மாற்றி, இந்துக்களை ஆசைகாட்டி, பயமுறுத்தி, பொய்யான வாக்குறுதிகளை அளித்து மதமாற்றம் செய்த “மதமாற்ற வியாபாரி” கிறிஸ்தவ டி.ஜி.எஸ். தினகரன் பெயர் வைத்திருப்பது தமிழ்பண்பாட்டிற்கும், பெரும்பான்மை இந்து சமுதாயத்திற்கும் இழைக்கப்படுகிற மிகப்பெரிய அநீதி, இதை இந்து முன்னணி வன்மையாக கண்டிக்கிறது.
தினகரன் - தமிழ்நாட்டில் மட்டுமல்லாது, இந்தியா முழுவதும் கல்விப்பணியாற்றிய தமிழர் என்று சில தமிழ் சமயத்தை சாராதவர்கள் கூறுகிறார்கள். தினகரன் கோவையில் காருன்யா பல்கலைக்கழகம் அமைத்து முற்றிலும் மதமாற்ற பணியே நடைபெற்று வருகிறது. இதுதான் தமிழ்நாட்டுக்கு செய்த தொண்டா?
அப்படியானால், மேல்மருவத்தூர் அடிகளார், மாதா அமிர்தானந்த மயிதேவி, சின்மயா மிஷன், ரவிசங்கர் சுவாமி போன்ற பல ஆன்மீகப் பெரியவர்கள் கல்வி நிலையங்கள், மருத்துவமனைகள் போன்ற பல தொண்டுகள் செய்து வருகிறார்கள். இவர்களில் யாராவது மதமாற்றம் செய்ததாக வரலாறு உண்டா?
தமிழக மக்களின் தாகம் தீர்க்க கிருஷ்ணா நதிநீர் கிடைத்திட சுமார் 250 கோடி ரூபாய் கொடுத்த ஸ்ரீ சத்திய சாயிபாபா கட்டாய மதமாற்றம் செய்தாரா? இவர்களின் பெயர்களை தமிழ்நாட்டில் எந்த ஒரு சாலைக்கோ பெயர் வைக்காமல் தினகரன் பெயர் வைத்திருப்பது முழுக்க முழுக்க அரசியல். தேர்தல் கால கூத்து, ஓட்டு வாங்கும் மலிவானயுக்தி.
கிரீன்வேஸ் சாலையில் தேவர் திருமகன், பி.எஸ். குமாரசாமி ராஜா போன்ற தேசபக்தர்கள் பெயர்கள் இருக்கும் போது தற்போது தினகரன் பெயரை வைத்திருப்பது தேசபக்தர்களை அவமானப்படுத்தும் செயல். டி.ஜி.எஸ். தினகரன் பெயரை அரசு வைத்துள்ளதால் தி.மு.க அரசு மதமாற்றத்திற்கு சிவப்பு கம்பளம் விரிக்கிறது என்று பொதுமக்கள் உள்ளம் கொதிக்கிறார்கள்.
ஆழ்வார்பேட்டை கத்தீட்ரல் சாலைக்கு டி.டி. கிருஷ்ணமாச்சாரி சாலை (டி.டி.கே. ரோடு) என்று பெயர் சூட்டியபோது கிறிஸ்தவர்கள் அதை எதிர்த்த காரணத்திற்காக எம்.ஜி.ஆர். அம்முயற்சியை கைவிட்டார். திருவல்லிக்கேணி வாலாஜா சாலை என்ற பெயரை மாற்ற முயற்சித்த போது முஸ்லீம்கள் எதிர்ப்பு தெரிவித்ததால் அந்த பெயர் மாற்றமும் கைவிடப்பட்டது.
ஆகவே தமிழ்நாடு அரசு இந்த பெயர் மாற்ற உத்தரவை திரும்பப் பெறவேண்டும். இதை வலியுறுத்தி இந்து முன்னணி தமிழகம் முழுவதும் ஆர்ப்பாட்டம் நடைபெறும். சென்னையில் நாளை (4ஆம் தேதி) மாலை 4.30 மணிக்கு கிரீன்வேஸ் சாலையில் உள்ள ‘இயேசு அழைக்கிறார்’ மையம் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்று இராம.கோபாலன் தெரிவித்துள்ளார்.