கரூர் நெரிசலில் ஏற்பட்ட 41 பேர் உயிரிழப்பு ஒரு துரதிர்ஷ்டவசமான விபத்துதான்: திருமாவளவன்

Siva

திங்கள், 6 அக்டோபர் 2025 (15:06 IST)
கரூர் பொதுக்கூட்டத்தில் நடந்த கூட்ட நெரிசலில் ஏற்பட்ட 41 பேர் உயிரிழப்பு ஒரு துரதிர்ஷ்டவசமான விபத்துதான் என்றும், இதில் தவெக தலைவர் விஜய் மீது எந்த வன்மமும் இல்லை என்றும் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளார்.
 
செய்தியாளர்களிடம் பேசிய அவர், இந்தச் சம்பவம் திட்டமிட்ட கிரிமினல் நோக்கம் கொண்டது அல்ல என்பதை மக்கள் உணர்ந்துள்ளதாக கூறினார். இந்த உயிரிழப்புகளுக்கு விஜய் தார்மீக பொறுப்பேற்றிருக்க வேண்டும் என்பதே பொதுமக்களின் எதிர்பார்ப்பு. ஆனால், இதற்காக அரசு மீதோ, முதலமைச்சர் மீதோ பழி போடுவது நியாயமில்லை என்று அவர் வலியுறுத்தினார்.
 
காலதாமதம் மற்றும் அதிக மக்கள் ஒரே இடத்தில் கூடியதன் விளைவு இது என்பதை விஜய் மற்றும் அவரது கட்சியினர் புரிந்துகொள்ள வேண்டும் என்றும் திருமாவளவன் கேட்டுக்கொண்டார்.
 
மேலும், இந்தச் சம்பவத்தில் பா.ஜ.க. தலையிட்டு உள்நோக்கம் கற்பிக்க முயற்சிப்பது ஏற்புடையதல்ல என்று கூறிய அவர், விஜய்யை தங்கள் கூட்டணிக்குள் இழுக்க பா.ஜ.க. முயற்சிக்கிறது என்று தான் கருதவில்லை எனவும் தெரிவித்தார்.
 
 
Edited by Siva
 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்