இது வெறும் தவறோ அல்லது அலட்சியமோ அல்ல, பெரும் அரசியல் குற்றச்செயல் ஆகும்.. செல்வப்பெருந்தகை

Siva

திங்கள், 6 அக்டோபர் 2025 (15:11 IST)
வாக்குத் திருட்டு குற்றச்சாட்டை காங்கிரஸ் தொடர்ந்து கூறி வரும் நிலையில்  இதுகுறித்து தமிழ்நாடு காங்கிரஸ் மாநில தலைவர் செல்வப்பெருந்தகை அறிக்கை வெளியிட்டுள்ளார். அந்த அறிக்கையில் கூறியிருப்பதாவது: 
 
"பீகார் மாநிலத்தில் நடைபெற்ற சமீபத்திய சிறப்பு வாக்காளர் திருத்தப் பணிகளின் போது, மொத்தம் 22.7 லட்சம் தலித் மற்றும் முஸ்லிம் பெண்களின் பெயர்கள் திட்டமிட்ட வகையில் வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டுள்ளன என்பது மிகப் பெரிய ஜனநாயக அவலமாகும்.
 
இது வெறும் தவறோ அல்லது அலட்சியமோ அல்ல, மக்களின் அடிப்படை உரிமையான வாக்குரிமையைப் பறிக்கும் பெரும் அரசியல் குற்றச்செயல் ஆகும்."
 
தன்னிச்சையாகவும், நடுநிலையாகவும் செயல்பட வேண்டிய இந்திய தேர்தல் ஆணையமே ஒன்றிய பாஜக அரசின் அரசியல் விளிம்பில் சிக்கி, “SIR” என்ற குறியீட்டின் பெயரில் வாக்காளர்களை சமூக அடிப்படையில் பிரித்து நீக்கியிருப்பது, அரசியல் நயவஞ்சகத்திற்கும் அரசியலமைப்பை அவமதிப்பதற்கும் உச்சமான சான்று ஆகும்.
 
தலித் மற்றும் முஸ்லிம் பெண்கள் ஆகியோரின் வாக்குரிமையை மறுக்கும் இந்த செயல், சமத்துவம், சகோதரத்துவம், மதச்சார்பின்மை என்ற இந்திய அரசியலமைப்பின் மூலத்தத்துவங்களுக்கு நேரான துரோகமாகும்.
 
மக்கள் தலைவர் ராகுல் காந்தி அவர்கள் தொடர்ந்து வலியுறுத்தி வருவது போல், "இந்தியா மக்களின் குரலில் உயிர்பெற்றது; அதிகாரத்தின் குரலில் அல்ல.” அந்த மக்களின் குரலையே இவ்வாறு மௌனப்படுத்தும் முயற்சி, ஜனநாயகத்தை அழித்து, அதிகாரத்தை அடிமைப்படுத்தும் பாசிச முயற்சியாகும்.
 
இந்திய தேர்தல் ஆணையம் இச்சம்பவம் குறித்து உடனடியாக விளக்கம் அளித்து, வாக்காளர் பட்டியலில் நீக்கப்பட்ட அனைவரின் பெயர்களையும் மீட்டமைக்க வேண்டும். அதோடு, இதற்குப் பொறுப்பான அதிகாரிகள் மற்றும் அதற்கு உறுதுணையாக இருந்தவர்கள் மீது சட்டப்படி கடுமையான நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்.
 
தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி இந்த ஜனநாயக விரோத செயல்களை கடுமையாகக் கண்டிக்கிறது.‌ வாக்குரிமை என்பது குடிமக்களின் உயிர்நாடி; அதை வெட்டி ஆட்சி நடத்த முடியாது. மக்கள் தான் இறுதி அதிகாரம். மக்கள் தான் ஜனநாயகம். மக்கள் தான் இந்தியா.
 
இந்தியாவை பாகுபாடு அல்ல, அன்பு காக்கும்.
 
அதிகாரம் அல்ல, உண்மை நிலைக்கும்.
 
அராஜகம் அல்ல, ஜனநாயகம் வெல்லும்." எனக் கூறியுள்ளார்.
 
இவ்வாறு செல்வப்பெருந்தகை தனது அறிக்கையில் தெரிவித்தார்.
 
Edited by Siva
 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்