மத்தியப் பிரதேசம் மற்றும் ராஜஸ்தானில் இருமல் மருந்து குடித்ததில் 19 குழந்தைகள் உயிரிழந்த சம்பவத்தில், குழந்தைகளது மருத்துவர் டாக்டர் பிரவீன் சோனி கைது செய்யப்பட்டுள்ளார். இவரை கைது செய்ததற்கு இந்திய மருத்துவ சங்கம் எதிர்ப்பு தெரிவித்துள்ளது.
சிகிச்சை நெறிமுறைகள் பின்பற்றப்பட்டதால், மரணங்களுக்கான முழு பழியும் மருத்துவர் மீது சுமத்தப்படக் கூடாது என்றும், மருந்து தயாரிப்பு நிறுவனத்திற்கு அரசு அனுமதி வழங்கியது ஏன் என்றும் ஐ.எம்.ஏ. கேள்வி எழுப்பியுள்ளது. மருத்துவர் சோனியை விடுவிப்பது குறித்து மத்திய சுகாதாரத் துறை அமைச்சகத்துடன் பேச்சுவார்த்தை நடத்தப் போவதாக சங்கம் அறிவித்துள்ளது.
கைது செய்யப்பட்ட டாக்டர் சோனி, சிந்த்வாராவில் உள்ள பராசியாவில் பணியமர்த்தப்பட்ட குழந்தைகள் நல மருத்துவர். அவர் அலட்சியமாக செயல்பட்டதாகக் கூறி முதலமைச்சர் மோகன் யாதவ் உத்தரவின் பேரில் இடைநீக்கம் செய்யப்பட்டார்.
ஆய்வக அறிக்கையில், இந்த இருமல் மருந்தில் அதிக நச்சுத்தன்மை வாய்ந்த வேதிப்பொருளான 48.6% டையெத்திலீன் கிளைக்கால் இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் காரணமாக தமிழ்நாடு, கேரளா உள்ளிட்ட பல மாநிலங்கள் இந்த மருந்துக்குத்தடை விதித்துள்ளன.