ஆட்டோவில் 5 சிறுவர்களை ஏற்றிச் செல்லலாம்: தமிழக அரசு அனுமதி!

புதன், 19 மார்ச் 2008 (10:56 IST)
''பயணிகளுக்கான ஆட்டோ ரி‌க்க்ஷாக்களில் 14 வயதுக்கு உட்பட்ட 5 சிறுவர்களை ஏற்றிச் செல்லலாம்'' என்று தமிழக அரசு அனுமதி அளித்துள்ளது.

இதுகுறித்து த‌மிழஅரசு வெளியிட்ட செய்திக் குறிப்பில், தற்போது பயணிகளுக்கான ஆட்டோ ரி‌க்க்ஷா வாகனங்களில் 3 பயணிகளை மட்டும் ஏற்றிச் செல்ல அனுமதிக்கப்பட்டு உள்ளது. ஆனால் 14 வயதுக்குட்பட்ட சிறுவர், சிறுமியரை ஏற்றிச் செல்வது குறித்து விதிகளில் குறிப்பிடப்படவில்லை.

இதனால் 3 எண்ணிக்கைக்கு மேல் சிறுவர், சிறுமியர்களை ஏற்றிச் செல்லும் போது ஆட்டோக்களை தணிக்கை அதிகாரிகள் பிடிக்கின்றனர். வாகனத்தில் அதிக பாரம் ஏற்றிச் செல்வதாக அவர்கள் மீது வழக்கு பதிவு செய்கின்றனர். எனவே, இதுகுறித்து பொது மக்களிடமிருந்து மனுக்கள் பெறப்பட்டுள்ளன. மக்களின் மனுக்களை அரசு பரிசீலித்து தமிழ்நாடு மோட்டார் வாகன விதிகள் 1989, பிரிவு 309-ல் திருத்தம் வெளியிட்டுள்ளது.

இதன்படி, ஆட்டோ ரி‌க்க்ஷாக்களில் 3 பயணிகள் அல்லது 14 வயதிற்கு உட்பட்ட 5 குழந்தைகளை ஏற்றி செல்லலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே, தற்போதுள்ள ஆட்டோ ரி‌க்க்ஷாக்களில் 3 பயணிகள் அல்லது 14 வயதுக்குட்பட்ட 5 சிறுவர்-சிறுமியரை ஏற்றிச் செல்லலாம். இது மோட்டார் வாகனச் சட்டப்படி அதிக பாரமாக கருதப்படாது எ‌ன்றதெ‌ரி‌‌வி‌க்க‌ப்ப‌ட்டு‌ள்ளது.

வெப்துனியாவைப் படிக்கவும்