தமிழக பொது சுகாதாரத்துறையின் கீழ் புதிதாக தொடங்கப்பட உள்ள நலவாழ்வு மையங்களுக்கு மருத்துவர், செவிலியர் உள்ளிட்ட பல்வேறு பணிகளுக்காக விண்ணப்பிப்பதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது.
தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் சென்னை மற்றும் பிற இடங்களில் மொத்தம் 708 நகர்ப்புற நலவாழ்வு மையங்கள் அமைக்கப்படும் என அறிவித்திருந்தார். அதன்படி முதற்கட்டமாக சென்னையில் 140 மையங்கள் உட்பட 500 மையங்கள் புதிதாக திறக்கப்பட்டன. இந்த நலவாழ்வு மையங்களில் ஒரு மருத்துவர், ஒரு செவிலியர், ஒரு சுகாதார ஆய்வாளர் மற்றும் ஒரு துணை பணியாளர் என 4 பேர் மாவட்ட சுகாதார சங்கங்கள் மூலமாக பணியில் அமர்த்தப்படுகின்றனர்.
இந்நிலையில் அடுத்தக்கட்டமாக 208 நகர்புற நலவாழ்வு மையங்கள் தொடங்கப்பட உள்ளது. அங்கு பணிபுரிவதற்கான மருத்துவர்கள், இதர பணியாளர்கள் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க அறிவிப்பு வெளியாகியுள்ளது. ஒப்பந்த அடிப்படையில் நியமிக்கப்படும் இந்த பணியிடங்களில் டாக்டருக்கு மாதம் ரூ.60 ஆயிரம், செவிலியருக்கு ரூ.18 ஆயிரம் ஊதியம் கிடைக்கும்.
விண்ணப்பிக்க விரும்புபவர்கள் 24ம் தேதி அந்தந்த மாவட்டங்களில் உள்ள சுகாதாரத்துறை சங்கத்தில் விண்ணப்பிக்கலாம். இந்த பணிகளுக்கான நேர்முகத்தேர்வு ஏப்ரல் 1 அன்று நடத்தப்பட்டு 2ம் தேதி முடிவுகள் வெளியாகும் என கூறப்பட்டுள்ளது.
Edit by Prasanth.K