தென்மேற்கு வங்க கடலில் இலங்கை அருகே புதிதாக ஒரு காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகி உள்ளது. இதனால் தமிழகத்தின் கடலோர மாவட்டங்களில் 2 நாட்களுக்கு பரவலாக மழை பெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்திருந்தது.
இந்நிலையில், நாகை மாவட்டத்தில் நேற்று மாலை முதல் பழத்த மழை பெய்து வருகிறது. கடலில் உயரமான அலைகள் எழும்பின. சாலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுவதால் எல்லா பள்ளிகள், கல்லூரிகளுக்கும் விடுமுறை விடப்பட்டுள்ளது.
கடலோரப் பகுதிகளில் காற்றுடன் பலத்த மழை பெய்து வருவதால், மீனவர்களை மீன் பிடிக்க செல்ல வேண்டாம் என மாவட்ட நிர்வாகம் எச்சரித்துள்ளது. வேதாரண்யத்தில் உப்பு உற்பத்தி நிறுத்தப்பட்டுள்ளது.
திருவாரூர் மாவட்டத்தில் விடிய விடிய பெய்து வரும் மழையினால் பொது மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்பு அடைந்துள்ளது. பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை விடப்பட்டுள்ளது. பள்ளிகயில் இன்று நடக்கவிருந்த அரையாண்டு தேர்வு ஜனவரி 2-ஆம் தேதிக்கு தள்ளி வைக்கப்பட்டுள்ளது.
இதேபோல் தஞ்சை மாவட்டத்தில் நேற்று இரவு பெய்ய தொடங்கிய மழை விடிய விடிய பெய்து வருகிறது. பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை விடப்பட்டது. இன்று நடக்க இருந்த தேர்வு தேதி குறிப்பிடாமல் தள்ளி வைக்கப்பட்டது.
புதுக்கோட்டை மாவட்டத்தில் நேற்று வெயில் சுட்டெரித்தது. ஆனால் இன்று காலை 6 மணி முதல் மழை பெய்து வருகிறது. இதனால் பொது மக்களின் இயல்பு வாழ்க்கை பாதித்தது. பள்ளி, கல்லூரிகள் வழக்கம் போல இயங்கின.
கரூர், பெரம்பலூர், அரியலூர் மாவட்டங்களில் இரவில் இருந்து மழை பெய்து வருகிறது.