இந்தியா, சிறிலங்கா உள்ளிட்ட நாடுகள் அடங்கிய ஆசிய-பசுபிக் மண்டலத்தில் உயர் தொழில்நுட்பங்களைக் கொண்ட ஹாக் உளவு விமானங்களை பயன்படுத்த அமெரிக்கா திட்டமிட்டு வருவதாக சிறிலங்காவின் பாதுகாப்புத்துறை உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.
ஆசிய - பசுபிக் மண்டலத்தில் தன் செல்வாக்கை அதிகரிப்பதற்காக நவீன தொழில்நுட்பம் கொண்ட உளவு விமானங்களை சிறிலங்கா உட்பட பல ஆசிய நாடுகளுக்கு வழங்க அமெரிக்கா முன்வந்துள்ளது. இதற்கான மாநாடு ஒன்று அடுத்த ஆண்டு நடைபெற உள்ளது.இது தொடர்பான பேச்சுக்கள் அமெரிக்காவுக்கும் சிறிலங்காவுக்கும் இடையில் நடைபெற்று வருகின்றன.
அமெரிக்கா நடத்தும் இந்த மாநாடு அடுத்த ஆண்டு ஏப்ரல் மாதம் ஹவாயில் நடைபெறும் என தற்காலிகமாக தீர்மானிக்கப்பட்டிருப்பதாக அமெரிக்காவின் பசிபிக் மண்டல கட்டளை மையம் ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனத்திற்கு தெரிவித்துள்ளது.
ஹாக் உளவு விமானத்தை உலகம் முழுவதும் பறக்கவிடுவதற்கான வாய்ப்புகள் குறித்து இம்மாநாட்டில் ஆய்வு செய்யப்படும். அமெரிக்காவின் திட்டத்திற்கு கூடுமான வரை அதிகமான நாடுகள் தங்கள் ஆதரவைத் தரவேண்டும் என்று தாங்கள் விரும்புவதாக அமெரிக்க படைத்துறை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
நார்த்ரொப் குருமான் நிறுவனத்தினால் உருவாக்கப்பட்ட குளோபல் ஹாக் உளவு விமானம் (Global Hawk) 2001 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 11 ஆம் நாள் நடைபெற்ற தாக்குதலுக்கு பின்னர் அமெரிக்காவால் அறிமுகப்படுத்தப்பட்டது.
இது 65,000 அடி உயரத்தில் பறந்தவாறு மிகவும் துல்லியமாக அதிகளவான பகுதிகளை கண்காணிக்கும் திறன் கொண்டது. மேலும் 35 மணிநேரம் தொடர்ச்சியாகவும் பறக்ககூடியது. 27.6 மில்லியன் டாலர்கள் மதிப்புள்ள இந்த விமானம் பெற்ற தகவல்களை உடனடியாக தரையில் உள்ள கட்டுப்பாட்டு மையங்களுக்கு அனுப்பும் திறன் கொண்டது. மேலும் நவீன ராடார்கள் உள்ளிட்ட கருவிகளையும் கொண்டுள்ளது.
குவாமில் உள்ள ஆன்டர்சன் விமானப்படைத் தளத்தில் இருந்து இந்த விமானம் 2009 ஆம் ஆண்டு பறக்கத் தொடங்கும் போது ஆசியா மற்றும் பசுபிக் மண்டலத்தில் அமெரிக்காவிற்கான மிக முக்கிய புலனாய்வு மையமாக அது விளங்கும் என்று கூறப்படுகிறது.
அமெரிக்காவின் இந்த திட்டத்திற்கு ஆதரவளிக்கும் நாடுகள், இந்த விமானத்திற்கான தரையிறங்கு தளங்களை வழங்கும். முதலில் ஜப்பான், தென்கொரியா, ஆஸ்திரேலியா, சிங்கப்பூர், பிலிப்பைன்ஸ், இந்தோனேசியா, மலேசியா, தாய்லாந்து, இந்தியா, புரூனே, சிறிலங்கா ஆகிய நாடுகள் ஒத்துழைக்கவுள்ளன.
அடுத்த ஆண்டு இந்த விமானத்தை ஆசிய நாடுகளில் சேவையில் ஈடுபடுத்துவதன் மூலம் அதன் திறனை விளக்க முடியும் என பசிபிக் மண்டல விமானப்படை தலைமையகத்தின் தலைவரான ஜெனரல் போல் ஹெஸ்ரர் தெரிவித்துள்ளார்.