தேவியரை வணங்க ஏற்ற காலம் நவராத்திரி என கூறப்படுவதேன்?

Webdunia
திங்கள், 11 செப்டம்பர் 2017 (10:47 IST)
மனிதனின் வளர்ச்சிக்கு உடல் வலிமையும், வாழ்க்கைக்குத் தேவையான செல்வமும் அறிவு வளமும் மிகவும் அவசியம்.  அதனை வெளிப்படுத்த உடல் வலிமையின் சக்தியாக ஸ்ரீதுர்க்கா தேவியையும், வாழ்க்கைக்குத் தேவையான செல்வத்தை நல்கவல்ல சக்தியாக ஸ்ரீமஹா லக்ஷ்மியையும் அறிவையும் ஆற்றலையும் தரவல்ல கல்வியின் தேவதையாக ஸ்ரீசரஸ்வதி தேவியையும் நாம் வழிபட்டு அந்த தேவியரின் அருள் பெற்று வலிமை, செல்வம், கல்வி ஆகிய மூன்றினையும் பெறுவதற்காக ஏற்படுத்தப்பட்ட பண்டிகையே நவராத்திரி எனப்படும்.

 
இந்த அற்புத விரதம் தேவி விரதங்களுள் சிறந்த ஒன்றாகும். ஸ்கந்தபுராணத்தில் இம் மகிமை பேசப்படுகிறது. அமாவாசைத் திதி தொடர்பின்றி அதிகாலையில் பிரதமை திதி வியாபித்திருக்கும் நாளே நவராத்திரி ஆரம்பதினமாகும். மறுநாட்காலை பிரதமை  அற்றுப் போய் விடுமாயின் முதல் நாளில் விரதம் கொள்ளல் வேண்டும்.
 
பிரதமை தினத்தன்று தான் கும்பம் வைத்து பூஜை ஆரம்பிக்க வேண்டும். நவராத்திரி வழிபாடு சக்தி மகிமையை விளக்கும்  மனிதனின் முக்கிய தேவைகளான கல்வி, செல்வம், வீரம் (தைரியம்) இம்மூன்றையும் வேண்டி அவற்றுக்கு அதிபதிகளான  சரஸ்வதி, லஷ்மி, துர்கை என்று மூன்று சக்தி அம்சங்களையும் வழிபடுதலே இவ்விரத்தின் நோக்மாகும்.
 
இந்த நாட்களில் கொண்டை கடலை, கடலை பருப்பு உள்ளிட்ட பல்வேறு பயறு வகைகளுடன் விதவிதமான நைவேத்தியங்களை நாளுக்கு ஒன்றாக படைத்து வழிபட வேண்டும். பராசக்தியின் பாடல்களை வீடுகளிலும், கோவில்களிலும்  பாடி அன்னையை ஆராதிப்பது சிறப்பும் மேன்மையையும் தரும். பெண்கள், சிறுவர், சிறுமிகள் கோலாட்டம், கும்மியடித்து  நடனமாடுதல் போன்றவை நவராத்திரி பண்டிகைக்கு உரிய சிறப்புகளாகும்.
 
ஒன்பது நாள் என்கிற கணக்கில் சில சமயம் குறைவு ஏற்படுகின்ற சந்தர்ப்பத்தில் எந்த தேவியருக்கு எத்தனை நாட்கள் என்ற  பிரச்சினை எழுவதுண்டு. அதற்கு வேறொரு விதியும் சொல்லப்படுகிறது. சரஸ்வதியை மூல நட்சத்திரத்தில் ஆவாஹுனம்  செய்து வழிபடத் தொடங்கி திருவோண நட்சத்திரத்தில் உத்வாசனம் செய்ய வேண்டும். அதனால் சரஸ்வதிக்குறிய நாட்களை தெரிவு செய்த பின்னர் ஏனைய நாட்களை உசித்தப்படி துர்க்கைக்கும் லஷ்மிக்கும் பிரித்துக்கொள்ளலாம்.
 
சக்தி வடிவங்களை மூன்றாகப் பிரித்து இச்சா சக்தி, கிரியா சக்தி, ஞான சக்தி என முப்பெரும் தேவியராக வழிபடுவது நம்  வழக்கம். மலை மகள், அலை மகள், கலை மகள் என்று துர்கா, லட்சுமி, சரஸ்வதி ஆகியோரை வணங்குகின்றனர். இதில்  துர்க்கை வீரத்தை (தைரியத்தை) அளிப்பவளாகவும், திருமகள் செல்வத்தை அருள்பவளாகவும், சரஸ்வதி (அறிவு) கல்வியை அருள்பவளாகவும் விளங்குகின்றனர். தேவியை வணங்க நவராத்திரியே ஏற்ற காலமாகக் கருதப்படுகிறது.
அடுத்த கட்டுரையில்