அக்காலத்தில் வீடுகளில் இருக்கும் மூலிகை மருந்துகளில் முக்கிய இடம் சித்தரத்தைக்கு உண்டு. குழந்தைகளுக்கு ஏற்படும் கக்குவான் எனும் இருமலுக்கு, சித்தரத்தையை தேனில் இழைத்து, நாக்கில் தடவி வருவார்கள். இருமல் உடனடியாக நீங்கிவிடும்.
இடுப்பு வலிக்கு, அம்மியில் இஞ்சியின் சாற்றை சிலதுளிகள் விட்டு, சிறு துண்டுகளாக வெட்டிய உலர்ந்த சித்தரத்தையை அதில் வைத்து தேய்க்க, சித்தரத்தையின் நார்ப்பகுதி தனியே வரும், அதை எடுத்துக் கொண்டு, சிறிது இஞ்சி சாற்றை மறுபடியும் கலந்து, தண்ணீரில் இட்டு கொதிக்க வைத்து, அந்த கலவையை இளஞ்சூட்டில், இடுப்பில் வலி உள்ள பகுதியில் தடவிவர, விரைவில் இடுப்பு வலி விலகிவிடும்.
கால் மூட்டுக்களில் ஏற்படும் வீக்கங்களுக்கு, தேவதாரு பட்டை, சாரணை வேர், சீந்தில் கொடி, நெருஞ்சில் வேர் மற்றும் சித்தரத்தை, இவை அனைத்தையும் நன்கு உலர்த்தி, பொடியாக அரைத்து, மூன்று டம்ளர் நீரில் கொதிக்க வைத்து, முக்கால் தம்ளராக வற்றியதும், அதை வடிகட்டி தினமும் இருவேளை பருகிவர, மூட்டு வீக்கங்கள் மர்றும் வலிகள் விலகிவிடும்.
உலர்ந்த சித்தரத்தை ஒரு துண்டு எடுத்து, வாயில் இட்டு சுவைக்க, நாக்கில் காரம் கலந்த விறுவிறுப்பு தன்மை தோன்றும், அப்போது சுரக்கும் உமிழ்நீரை விழுங்கிவர, குமட்டல், வாந்தி பாதிப்புகள் சரியாகி விடும். மேலும்,
சித்தரத்தை வறட்டு இருமலையும் போக்கும் ஆற்றல் வாய்ந்தது. உடல் சூட்டினால் ஏற்படும் உடல் பாதிப்புகளுக்கு சிறந்த தீர்வாகவும் உள்ளது.
நன்கு உலர்ந்த சித்தரத்தை, அமுக்கிரா கிழங்கு பொடி இவற்றை சிறிது தேனில் குழைத்து தினமும் இருவேளை என 48 நாட்கள் சாப்பிட்டு வர, மூட்டு வலிகளின் பாதிப்பு குறையும். எலும்புகளின் ஆற்றல் மேம்படும். சித்தரத்தையை தினசரி உணவில் சூப், துவையல், கஷாயம் போன்ற வகைகளில் சேர்த்து, பயன்படுத்தலாம்.