முதல் மூன்று நாட்களில் சுரக்கும் சீம்பால் அளவில் குறைவானது ஆனால் நோய் எதிர்ப்பு சக்தியில் மற்றும் அது தரும் ஆற்றலில் மிகுந்தது. தாயிடமிருந்து சீம்பால் உற்பத்தி 24 வாரம் கர்ப்பம்கடந்தபின் ஆரம்பிக்கிறது. உயிர் பிழைக்கும் வாய்ப்புள்ள 24 வாரம் கடந்த சிசுவிற்கு சீம்பாலை கலந்து தரலாம். அதிகப் புரதம் கொழுப்பு எதிர்ப்புச் சத்து நிறைந்த திரவத்தங்கம் சீம்பால். உயிர்ப்பொருட்கள், திசுக்கள், நொதிகள் குடல் வளர்ச்சி ஊக்கிகள், எதிர்ப்பு சக்தி என பல உடனடி நோய்எதிர்ப்பிற்கு உதவுகின்றன.
பிறகு சுரக்கும் தாய்ப்பாலை சத்துக்களின் தன்மை அடர்த்தி மற்றும் அளவு ஒவ்வொரு முறையும் மாறுபடும். தாகத்தை உடனே குறைக்க நீர் நிறைந்தும் பசியாற உடனடி லாக்டோஸ் சர்க்கரை மிகுந்தும் இருப்பது முன் பால் .இதை குடித்து விட்டு தூங்க தொடங்கினால் குழந்தையை எழுப்பி விட்டு பால் தருவதை தொடரவேண்டும். தாகமும் பசியும் மட்டுப் பட்டபின் குடிக்கும் போது சுரக்கும் பின்பாலில் புரதம் மற்றும் கொழுப்பு சத்து அதிகமாக இருக்கும் இவை ஆற்றலையும் உடல் வளர்ச்சியையும் திசுக்களின் பிரிதல் முதிர்தலையும் மேம்படுத்தும்.
பேரழிவு பேரிடர் காலங்களில் குழந்தைக்கு பிரச்சனையின்றி தரக்கூடிய ஒரு உடனடி உணவு தாய்ப்பால் மட்டும். தாய்ப்பால் குடிக்கும் குழந்தைக்கு ஊட்டச் சத்துப்பிரச்சினைகள், இரத்தசோகை, நிமோனியா ,வயிற்றுப்போக்கு, பற்சொத்தை ,ஒவ்வாமை ஆகியவை வரும் வாய்ப்பு மிகக் குறைவு.