மேற்கு வங்க மாநிலத்திற்கு வந்த பிரதமர் மோடியை முதலமைச்சர் மம்தா பானர்ஜி சந்தித்து பேசி இருப்பதை அடுத்து இந்தியா கூட்டணியில் சலசலப்பு ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
பிரதமர் மோடி நேற்று மேற்கு வங்க மாநிலத்திற்கு வந்த போது ராஜ்பவனில் மோடி - மம்தா சந்திப்பு நடந்தது. இது குறித்து கருத்து தெரிவித்த பாஜகவின் சுவேந்து அதிகாரி பிரதமர் முன் தலை வணங்க மம்தா வந்திருக்கிறார் என்றும் பிரதமரை மகிழ்விக்கும் முயற்சியில் அவர் ஈடுபட்டு உள்ளார் என்றும் அவர் என்ன செய்தாலும் மோடி யாரையும் கொள்ளையடிக்க விடமாட்டார் என்றும் விமர்சனம் செய்திருந்தார்
மேற்குவங்க காங்கிரஸ் தலைவர் இது குறித்து கருத்து தெரிவித்த போது பிரதமரை முதல்வர் மம்தா எதற்காக சந்தித்தார்? இந்த சந்திப்பு குறித்து நாங்கள் காரணத்தை அறிய விரும்புகிறோம் என்று தெரிவித்திருந்தார்
இதற்கு பதில் அளித்த மம்தா பானர்ஜி மேற்குவங்கம் வந்த பிரதமரை வரவேற்க செல்லவில்லை என்பதால் மரியாதை நிமித்தமாக சந்தித்தேன், மாநில பிரச்சனை குறித்து தான் இந்த சந்திப்பின்போது உரையாடினோம். இது மக்களுக்காக அளிக்கும் விளக்கமே தவிர அரசியல் கட்சிகளுக்கு அளிக்கும் விளக்கம் இல்லை என்றும் அவர் கூறினார்