3 தலைநகரங்களுக்கான மசோதா நிறைவேற்றப்பட்டதை அடுத்து ஆந்திராவில் போராட்டங்கள் வலுப்பெற்றுள்ளது.
ஆந்திராவில் சில மாதங்களுக்கு முன்பு ஜெகன் மோகன் ரெட்டி தலைமையிலான ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் ஆட்சி அமைத்தது. இதனைத்தொடர்ந்து ஜெகன் பல அறிவிப்புகளை மக்களுக்காக வழங்கி வருகிறார்.
இந்நிலையில் தனது அடுத்த அதிரடியாக ஆந்திராவுக்கு மூன்று தலைநகரங்களை உருவாக்க திட்டமிட்டு வந்தார். ஆம், வடக்கு கடலோர ஆந்திரா, மத்திய ஆந்திரா, ராயலசீமா ஆகிய பகுதிகளின் 3 நகரங்கள் தலைநகரங்களாக இருக்கும் என கூறப்பட்டது.
விசாகப்பட்டினம் உள்கட்டுமான வசதிகளுடன் இருப்பதால் அதனை நிர்வாகத் தலைநகராகவும், அமராவதியை சட்டபேரவை தலைநகராகவும் , கர்நூலை நீதித்துறை தலைநகராகவும் உருவாக்கலாம் என ஆலோசனைகள் மேற்கொள்ளப்பட்டது.
ஆனால், இதனை எதிர்கட்சி தலைவர் சந்திரபாபு நாயுடு கடுமையாக எதிர்த்தார். மேலும், அமராவதியை தலைநகராக நிர்மாணிக்க இடம் கொடுத்த விவசாயிகளும், பொதுமக்களும் இதற்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டங்களில் ஈடுபட்டு வந்தனர்.
இதற்கிடையில் ஆந்திர சட்டப்பேரவை சிறப்புக் கூட்டத்தில் 3 தலைநகர் அமைப்பதற்கான மசோதா தாக்கல் செய்யப்பட்டது. இதற்கு தெலுங்குதேசம் கட்சியினர் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். இறுதியாக 12 மணி நேர விவாதத்திற்குப் பின் ஆந்திராவில் 3 தலைநகர்களை உருவாக்கும் மசோதா நிறைவேற்றப்பட்டது.
3 தலைநகரங்களுக்கான மசோதா நிறைவேற்றப்பட்டதை அடுத்து ஆந்திராவில் போராட்டங்கள் வலுப்பெற்றுள்ளது. அமராவதி பகுதியை சுற்றி 29 கிராம் மக்கள் கடையடைப்பு போராட்டத்தில் ஈடுப்பட்டனர். மேலும் விவசாயிகள் சங்கம் நடத்திய பேரணியி கலந்துக்கொண்ட தெலுங்கு தேசம் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் கல்ல ஜெயதேவ் கைது செய்யப்பட்டார் என்பதும் குறிப்பிடத்தக்கது.