பாஜக மூத்த தலைவரும், மத்திய முன்னாள் அமைச்சருமான சுஷ்மா சுவராஜ் வெளிநாட்டில் சிக்கி தவித்த இந்தியர்களை மீட்டு நாட்டிற்கு கொண்டு வந்த பெருமை உடையவர்.
ஒரு அரசியல் தலைவர் அதிலும் ஒரு பெண் தலைவர், தான் இருக்கும் கட்சியினர் மட்டுமின்றி மற்ற கட்சியினர்களும் மதிக்கும் வகையில் நடந்து கொண்ட மிகச்சில தலைவர்களில் ஒருவராக சுஷ்மா சுவராஜ் திகழ்ந்தார்.
தனது நாற்பது ஆண்டுகள் அரசியலில் பல்வேறு பதவிகளை வகித்தாலும், கட்சி மாறுபாடின்றி அனைத்துக் கட்சியினரும் மதிக்கும் தலைவராக அவர் விளங்கியதுதான் மிகச்சிறப்பானது.
25 வயதிலேயே அமைச்சராக பொறுப்பேற்று டெல்லி முதலமைச்சர், மத்திய அமைச்சர், பாஜக பொதுச்செயலாளர், செய்தித் தொடர்பாளர், எதிர்க்கட்சித் தலைவர், வெளியுறவு அமைச்சர் போன்ற பெருமைக்குரிய பல பதவிகளை வகித்தவர்.
சட்டசபைக்கு 3 முறையும் மக்களவைக்கு 7 முறையும் தேர்ந்தெடுக்கப்பட்ட சுஷ்மா, வாஜ்பாய் அமைச்சரவையில் கேபினட் அமைச்சராகப் பணியாற்றினார். அதன்பின்னர் 2014 - 2019 காலக்கட்டத்தில் மோடி அரசியல் வெளியுறவு அமைச்சராக பதவி வகித்தார்.
இந்த பதவிற்கு ஏற்ற நபராக திகழ்தார். வெளிநாடுகளில் பாதிக்கப்படும் இந்தியர்கள் நாடு திரும்ப உடனடி முயற்சிகளை மேற்கொண்டார். சமூக வலைதளங்களில் எழுப்பப்படும் கேள்விக்கு உடனுக்குடன் பதில் அளிக்கும் தலைவர்களில் ஒருவர் சுஷ்மா.
உதவி வேண்டும் என ஒரு டிவிட் போட்டால் போதும் அது மிகவும் நியாயமாக இருக்கும் பட்சத்தில் பாராபட்சம் பார்க்காமல் தனிப்பட்ட முறையில் நடவடிக்கை எடுப்பதாகட்டும், சட்ட வழியில் நடவடிக்கை எடுப்பதாகட்டும் அனைத்தையும் சரிவர செய்தவர்.