போர்வெல் போடும் முன் என்னென்ன செய்ய வேண்டும்: 10 ஆண்டுகளுக்கு முன்பே உச்சநீதிமன்றம் வகுத்த வழிமுறைகள்

Webdunia
புதன், 30 அக்டோபர் 2019 (08:37 IST)
பணம் இருந்தால் யார் வேண்டுமானாலும் எங்கு வேண்டுமானாலும் போர்வெல் போடலாம் என்ற நிலை தான் இன்று தமிழகத்தில் மட்டுமின்றி இந்தியா முழுவதும் உள்ளது. போர்வெல் போடும் நிறுவனங்கள் ஆங்காங்கே புற்றீசல் போல் முளைத்துவிட்டது. அரசின் விதிமுறைகள் அனைத்தும் காற்றில் பறக்கவிடப்பட்டு விதிகளை மீறி போர்வெல் போடப்பட்டு வருகிறது. இந்த நிலையில் 10 ஆண்டுகளுக்கு முன்னரே உச்சநீதிமன்றம் போர்வெல் போடுவது குறித்த வழிமுறைகளை வகுத்துள்ளது. அவை என்னென்ன என்பதை பார்ப்போம்
 
1. போர்வெல் அமைக்க வேண்டும் என்றால் நிலத்தின் உரிமையாளர் 15 நாட்களுக்கு முன்பே அரசுக்கு தெரியப்படுத்த வேண்டும்.
 
2. போர்வெல் போடும் நிறுவனங்கள் மாவட்ட நிர்வாகத்திடமோ அல்லது சம்பந்தப்பட்ட அதிகாரியிடமோ பதிவு செய்து முறையாக அனுமதி பெற்றிருக்க வேண்டும்.
 
3. போர்வெல் போடும் இடத்தில் போர்வெல் போடும் உரிமையாளர் மற்றும் நிறுவனத்தின் தகவல்கள் அடங்கிய பலகை வைத்திருக்க வேண்டும்.
 
4. டிரில்லிங் செய்யும் போது அந்த இடத்தை சுற்றி வேலிகளும் தடுப்புகளும் வைத்திருப்பது மிகவும் முக்கியமானதாகும்.
 
5. போர்வெல் பணிகள் முடிவடைந்தவுடன் ஆழ்துளை கிணறுகளை போல்ட் நெட்டுகள் கொண்டு மூட வேண்டும். பயன்படாத ஆழ்துளை கிணறுகளில் மணல், களிமண், கூழாங்கற்கள் ஆகியவற்றை கொட்ட வேண்டும்.
 
6. சுப்ரீம் கோர்ட் வகுத்த வழிமுறைகள் பின்பற்றப்படுகின்றனவா என்பதை மாவட்ட ஆட்சியர்கள் சோதனை செய்ய வேண்டும். 
 
7. ஆழ்துளை கிணறுகளின் நிலை, டியூப்வெல்கள் தோண்டியது, எத்தனை கிணறுகள் பயன்பாட்டில் உள்ளது, எத்தனை பயன்படுத்தப்படாமல் உள்ளது, திறந்த நிலையில் உள்ள ஆழ்துளை கிணறுகள் எத்தனை, சரிவர மூடப்படாத கிணறுகளின் எண்ணிக்கை எத்தனை என்பது குறித்து மாவட்ட, தாலுக்கா, கிராம அளவில் தகவல்களை பராமரிக்க வேண்டும்.
 
8. ஊரக பகுதிகளில் மேற்கண்டவை கிராம தலைவர் மற்றும் விவசாயத் துறையின் நிர்வாகி கண்காணிக்க வேண்டும். நகர்ப்புறங்களில் இளநிலை உதவியாளர் மற்றும் நிலத்தடி, பொது சுகாதாரம், மாநகராட்சியை சேர்ந்த நிர்வாகி கண்காணிக்க வேண்டும்.
 
9. கைவிடப்பட்ட கிணறுகள் உள்ள இடங்களில் திடீர் ஆய்வு நடத்தப்பட வேண்டும். இந்த தகவல்கள் அனைத்தும் மாவட்ட ஆட்சியரோ ஊரக வளர்ச்சி அலுவலரோ பராமரிக்க வேண்டும் 
 
மேற்கண்ட உச்சநீதிமன்றத்தின் வழிமுறைகளை யாராவது பின்பற்றுகிறார்களா? என்பதை அவரவர் மனசாட்சியை கேட்டால் தெரியும்

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்