ரயில் ஓட்டுநருக்கு திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டதை அடுத்து சப்தகிரி எக்ஸ்பிரஸ் ரயில் பாதியில் நிறுத்தப்பட்டதால் பயணிகள் கடும் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
திருப்பதியில் இருந்து சென்னை சென்ட்ரல் நோக்கி வந்து கொண்டிருந்த சப்தகிரி விரைவு ரயில் நேற்று இரவு திருவள்ளூர் ரயில் நிலையம் அருகே வந்து கொண்டிருந்தபோது, ரயில் ஓட்டுனர் யுகேந்திரன் என்பவருக்கு திடீரென வயிற்று வலி வந்தது. அவர் வலியால் துடித்த நிலையில் ரயிலை அவர் திருவள்ளூரில் நிறுத்தி, அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.
இந்த நிலையில், சப்தகிரி விரைவு ரயில் திருவள்ளூர் ரயில் நிலையத்தில் நீண்ட நேரமாக நின்று கொண்டிருந்ததால் பயணிகள் அதிருப்தி அடைந்தனர். அதன்பின் ரயில் ஓட்டுனருக்கு உடல் நலக்குறைவு என்பதை அறிந்த பின் அவர்கள் வேறு ரயில்களையும் மின்சார ரயில் பிடித்து சென்னை சென்ட்ரல் வந்ததாக கூறப்படுகிறது.
கிட்டத்தட்ட 10 மணி நேரம் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த சப்தகிரி விரைவு ரயிலை இயக்க ஓட்டுனர் கலையரசன் என்பவரை நியமித்த பின்னர் தான் அந்த ரயில் சென்ட்ரல் ரயில் நிலையம் வந்தது என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில், உடல் நலக்குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வரும் யுகேந்திரன் என்ற ரயில் ஓட்டுனரிடம் ரயில்வே அதிகாரிகள் விசாரணை செய்து வருவதாகவும், அவருக்கு திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட என்ன காரணம் என்பது குறித்தும் விசாரணை செய்து வருவதாகவும் கூறப்படுகிறது.