மோடி தனிப்பட்ட விமர்சனங்களை நிறுத்த வேண்டும் - பிரியங்கா காட்டம்!

Webdunia
வெள்ளி, 25 ஏப்ரல் 2014 (15:22 IST)
உத்தர பிரதேச மாநிலம் ரேபெரேலியில் சோனியா காந்தியை ஆதரித்து பிரச்சாரம் செய்த பிரியங்கா காந்தி, பாஜக பிரதமர் வேட்பாளர் நரேந்திர மோடி தனிப்பட்ட விமர்சனங்களை நிறுத்த வேண்டும் என்று காட்டமாக கூறினார்.
மோடி தனது தேர்தல் பிரச்சாரங்களில், காங்கிரஸ் கட்சி இந்திய நாட்டில் உருவாக்கியிருக்கும் வளர்ச்சி மாதிரி என்பது ஆர்.எஸ்.வி.பி. (RSVP ) ராகுல், சோனியா, வதேரா, பிரியங்கா வளர்ச்சி மாதிரி என்று விமர்சனம் செய்தார். மேலும் காங்கிரஸ் கட்சி தனது சின்னத்தை மாற்றிவிட்டது என்றும், தற்போது காங்கிரஸ் கட்சியின் அடையாளம் ஏபிசி (ABC) ஆதர்ஷ் ஊழல், போபர்ஸ் ஊழல், நிலக்கரி ஊழல் தான் என்றும் விமர்சித்திருந்தார்.
 
இதனை குறிப்பிட்டு பேசிய பிரியங்கா காந்தி, "குஜராத் மாதிரி வளர்ச்சித் திட்டம் ஏழை விவசாயிகளுக்கு ஏதேனும் நன்மைகள் செய்துள்ளதா? பெண்கள் பாதுகாப்பை உறுதி செய்துள்ளதா? குஜராத்தில் மோடி தனக்கு வேண்டப்பட்டவர்களுக்கு குறைந்த விலையில் நிலங்களை விற்றதை தவிர வேறு என்ன செய்தார்?. தனிப்பட்ட விமர்சனங்களை நரேந்திர மோடி நிறுத்திக் கொள்ள வேண்டும்" என்று காட்டமாக கூறினார்.
 
மதவாதம், பிரிவினையை ஒதுக்கி, தேசத்தின் ஒற்றுமையை வலுப்படுத்துவதையே கொள்கையாக கொண்ட காங்கிரஸ் கட்சிக்கு வாக்களியுங்கள் என பிரியங்கா வேண்டுகோள் விடுத்தார்.