கொரோனா தடுப்பு நடவடிக்கையாக நாடு முழுவதும் ஊரடங்கு அமலில் உள்ளது. இதனால் பல்வேறு இடங்களில் ஆட்டோ, கார் போன்ற வாகனங்கள் பயணிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. பலர் பொய்யான காரணங்களை சொல்லி சாலைகளில் திரிவதால் உண்மையாக அவசர காரியமாக செல்பவர்களுக்கு கூட பிரச்சினைகள் எழுந்துள்ளது.
கேரளாவில் 65 வயதான முதியவர் ஜார்ஜ் என்பவர் உடல்நல குறைவால் புனலூர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். உடல் நலம் பெற்ற அவர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டதை தொடர்ந்து அவரது மகன் ராய் அவரை வீட்டிற்கு அழைத்து செல்ல ஆட்டோவில் வந்துள்ளார். ஆனால் மருத்துவமனைக்கு ஒரு கிலோ மீட்டர் முன்பே போலீஸார் ஆட்டோவை நிறுத்தியுள்ளனர். ராய் நிலமையை எவ்வளவோ எடுத்து கூறியும் போலீஸார் ஆட்டோவை அனுமதிக்க மறுத்துள்ளனர்.
இதனால் மருத்துவமனைக்கு சென்ற ராய் தனது தந்தை முதுகில் சுமந்தபடி ஒரு கிலோ மீட்டர் தூரம் நடந்தே சென்று, பிறகு அவரை ஆட்டோவில் அழைத்து சென்றுள்ளார். இந்த சம்பவம் கேரளாவில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. போலீஸார் அவரை ஆட்டோவில் செல்ல அனுமதித்திருக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் சிலர் கருத்து தெரிவித்துள்ளனர்.