ஏர் இந்தியா நிறுவன அதிகாரியை செருப்பால் சரமாரியாக அடித்த சிவசேனா எம்பி ரவீந்திர கெய்க்வாட், தற்போது அந்த நிறுவனத்தின் மீது வழக்கு பதிவு செய்துள்ளார்.
ரவீந்திர கெய்க்வாட் டெல்லி செல்வதற்காக புனே விமான நிலையத்துக்கு வந்தார். எம்பி என்பதால் ஏர் இந்தியாவின் பிசினஸ் வகுப்பில் டிக்கெட் எடுக்கப்பட்டிருந்தது.
ஆனால், அவர் செல்ல இருந்த விமானத்தின் அனைத்து இருக்கைகளும் எகனாமி வகுப்பிற்காக மட்டுமே ஒதுக்கப்பட்டிருந்தன. இதனால் வேறு வழியில்லாமல் அதே விமானத்தில் பயணம் செய்தார்.
பின்னர், டெல்லி விமானநிலையத்தில் விமானம் வந்து இறங்கியதும் விமானத்தை விட்டு இறங்காமல் இருந்தார். தகவல் அறிந்து வந்த ஏர் இந்தியா மேலாளர் சிவகுமார், ரவீந்திர கெய்க்வாட்டை சமாதானப்படுத்த முயன்றார்.
ஆனால், ரவீந்திர கெய்க்வாட் விமான நிறுவன அதிகாரியை சரமாரியாக அடித்தார். மேலும், சட்டையை கிழித்து செருப்பால் அவரது கன்னத்தில் 25 முறைக்கும் மேல் அடித்தார்.
இதனால், எம்பி ரவீந்திர கெய்க்வாட் பெயர் விமானத்தில் பயணம் செய்பவர்கள் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டது. இதனால் கடுப்பான கெய்க்வாட் ஆணவத்தோடு பேசியதாக கூறப்படுகிறது.
இந்நிலையில், விமானத்தில் பயணம் செய்பவர்கள் பட்டியலில் இருந்து அவர் நீக்கப்பட்டது தொடர்பாக எம்பி ரவீந்திர கெய்க்வாட் ஏர் இந்தியா மீது வழக்குத் தொடர்ந்துள்ளார்.