மோடியின் அறிவிப்பு ; தொடரும் உயிர் பலிகள் : இன்னும் எத்தனையோ?

Webdunia
திங்கள், 21 நவம்பர் 2016 (13:06 IST)
ரூபாய் நோட்டு மாற்றி தரும் பணியில், தொடர்ந்து வேலை செய்ததால் ஏற்பட்ட மன அழுத்தம் காரணமாக வங்கி மேலாளர் ஒருவர் பரதாபமாக உயிர் இழந்தார்.


 

 
மக்களிடம் உள்ள பழைய 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என அறிவிக்கப்பட்டிருக்கும் நிலையில், புதிய ரூபாய் நோட்டுகளை பெற மக்கள் வங்கிகளில் குவிந்துள்ளனர். இதனால், வங்கி ஊழியர்களுக்கு வேலை பளு அதிகரித்துள்ளது.  
 
மேலும், வழக்கமாக வங்கிகளில் நடைபெறும், பண, காசோலை பரிவர்த்தனைகள் மற்றும் மற்ற வேலைகள் அப்படியே தேங்கிக் கிடக்கிறது. இதனால் எல்லாவற்றையும் ஒரு சேர முடிக்க வேண்டிய நிலைக்கு வங்கி ஊழியர்கள் தள்ளப்பட்டுனர். எனவே, காலை நேரங்களில் விரைவாக வங்கி திறக்கப்படுகிறது. அதேபோல், இரவு நேரங்களிலும் அதிக நேரம் வேலை செய்ய வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. இது வங்கி ஊழியர்களின் உடல் மற்றும் மன நிலையை பாதிப்பதாக தகவல் வெளிவந்து கொண்டிருக்கிறது.
 
இதில் உடல் நிலை மற்றும் மனநிலை பாதிப்பு அடைந்து, திடீரென ஏற்படும் மாரடைப்பு காரணமாக வங்கி ஊழியர்கள் மரணம் அடைவது தொடர் கதையாகி வருகிறது.
 
சமீபத்தில்தான், ஹரியானா மாவட்டத்தை சேர்ந்த ராஜேஷ்குமார்(56) என்பவர், வேலை பளுகாரணமாக எழுந்த மன அழுத்தம் காரணமாக, வங்கியிலேயே உயிரிழந்தார். தற்போது அதேபோன்ற சம்பவம் ஆந்திர மாநிலத்தில் நடந்துள்ளது. 
 
ஆந்திர மாநிலம் நெல்லூர் பகுதியில் உள்ள பாரத ஸ்டேட் வங்கியில் துணை மேலாளராக பணி புரிந்து வந்தவர் ஷெரிப்(46).  இவர் கடந்த 8ம் தேதி முதல் கடுமையான வேலை பளுவில் சிக்கியிருந்தார்.  பொதுமக்களின் கோபத்தை ஒருபக்கம் சமாளித்துக் கொண்டு, காலை 8 மணி முதல் இரவு 10 மணி வரை கடுமையாக பணியாற்றிக் கொண்டிருந்தார்.
 
இதனால் அவருக்கு கடுமையான மன உளைச்சல் மற்றும் வேலையில் கவனம் செலுத்த முடியாத நிலை ஏற்பட்டது. இதை தனது சக ஊழியர்களிடமும் அவர் பகிர்ந்து கொண்டுள்ளார்.
 
முக்கியமாக, சில நாட்களுக்கு முன்பு, புதிய ரூபாய் நோட்டுகளை மாற்றித்தருவதில் ஏற்பட்ட தாமதம் தொடர்பாக, இந்த வங்கியில் வேலை பார்க்கும் ஊழியர்கள் அனைவரையும், பொதுமக்கள் வங்கிக்குள்ளேயே வைத்து பூட்டினர். அதன்பின் போலீசார் வந்து அவர்களை மீட்டார்கள்.
 
இந்த மொத்த காரணங்களால் ஷெரீப் மன உளைச்சலுக்கு ஆளாகியிருந்ததாக தெரிகிறது. இந்நிலையில், அவர் நேற்று முன்தினம் பணியில் இருக்கும் போது, அப்படியே இருக்கையில் சாய்ந்து விழுந்தார். ஊழியர்கள் அவரை மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார். அவருக்கு மனைவியும், 2 குழந்தைகளும் உள்ளனர்.
அதிக வேலைப்பளு மற்றும் மன உளைச்சல் காரணமாக, இப்படி தொடர்ந்து உயிர் பலிகள் ஏற்பட்டு வருவது, வங்கி ஊழியர்கள் இடையே கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.
 
ஏற்னவே ரூபாய் நோட்டுகள் பற்றிய அறிவிப்பினால் ஏற்பட்ட அதிர்ச்சி மற்றும் வங்கி, ஏ.டி.எம் வாசலில் நிற்கும் போது ஏற்பட்ட மாரடைப்பு காரணமாக பொதுமக்கள் 50 பேருக்கும் மேல் பலியாகிவிட்ட நிலையில், ஒருபக்கம் வங்கி ஊழியர்களின் உயிர் பலிகள் தொடர்ந்து கொண்டிருக்கிறது..

இதற்கெல்லாம் என்ன பதில் வைத்திருக்கிறார் மோடி?...
அடுத்த கட்டுரையில்