பெங்களூர் சிறையில் சசிகலாவுக்கு சிறப்பு சலுகைகள் வழங்கப்படுவதாக அம்பலப்படுத்திய டிஐஜி ரூபாவுக்கு உயர் அதிகாரிகள் தொந்தரவு அளித்து வருவதாக அவர் கூறியுள்ளார்.
சொத்துக்குவிப்பு வழக்கில் 4 வருட சிறைத்தண்டனை பெற்று, தற்போது பெங்களூர் பரப்பன அக்ரஹாரா சிறையில் அடைக்கப்பட்டுள்ள சசிகலாவிற்கு, தனி சமையலறை உட்பட பல வசதிகளை சிறைத்துறை டிஜிபி சத்தியநாரயணா செய்து கொடுத்துள்ளார் என கூறப்படுகிறது.
இதற்காக 2 கோடி ரூபாய் வரை பணம் கை மாறியுள்ளது என சிறைத்துறை டிஐஜி ரூபா புகார் தெரிவித்து அது தொடர்பான அறிக்கையை அவர் கர்நாடக மாநில டிஜிபி தத்தாவுக்கு அனுப்பியுள்ளார். இந்த விவகாரம் தமிழகம் மற்றும் பெங்களூரில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதனையடுத்து செய்தியாளர்களிடம் பேசிய டிஐஜி ரூபா, தன்னுடைய அறிக்கையில் சிறையில் சசிகலாவுக்கு சலுகை அளிப்பது குறித்து உறுதியாக கூறியுள்ளதாக தெரிவித்தார். சசிகலாவுக்கு எதிராக குற்றச்சாட்டு வைப்பதால் எனக்கு எந்த லாபமும் இல்லை. எனவே இந்த விவகாரத்தில் என்னை குறிவைப்பதில் நியாயம் இல்லை. இது தொடர்பான எந்த விசாரணைக்கும் நான் தயாராக உள்ளேன் என்றார்.
மேலும், டிஜிபிக்கு அளித்த அறிக்கையில் உள்ளவற்றை நான் ஊடகத்திடம் பகிர்ந்துகொள்ளவில்லை. அதே நேரத்தில் செய்தியாளர்களை சந்தித்ததற்காக நடவடிக்கை எடுத்தாலும் எனக்கு கவலை இல்லை. நான் உண்மையை வெளிப்படுத்தியதால் உயர் அதிகாரிகள் எனக்கு தொந்தரவு கொடுக்கின்றனர் என ரூபா கூறியுள்ளார்.