மணிப்பூரில் பழங்குடியின சமூகத்திடையே ஏற்பட்ட மோதல் தீவிரமடைந்துள்ள நிலையில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா முக்கிய ஆலோசனையில் ஈடுபட்டுள்ளார்.
மணிப்பூரில் குக்கி மற்றும் மெய்தி சமூகத்தினர் இடையே ஏற்பட்ட மோதல் கடந்த ஒரு ஆண்டுக்கும் மேலாக தொடர்ந்து வருகிறது. இதனால் மணிப்பூர் முழுவதும் ராணுவ கட்டுப்பாட்டில் கொண்டு வரப்பட்டுள்ளது. எனினும் அடுத்தடுத்து இரு பிரிவினர் இடையே எழும் மோதல்களில் பலர் உயிரிழந்து வருகின்றனர்.
சமீபத்தில் குக்கி பழங்குடியின பெண் ஒருவர் வன்கொடுமை செய்யப்பட்டு எரித்துக் கொல்லப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. அதை தொடர்ந்து குக்கி சமூக மக்கள் வன்முறையில் ஈடுபட்டதுடன், தடுக்க வந்த சிஆர்பிஎஃப் வீரர்கள் முகாம்களிலும் தாக்குதல் நடத்தினர்.
அதன்பின்னர் மெய்தி பிரிவை சேர்ந்த பெண்கள், குழந்தைகள் மாயமான நிலையில் சடலமாக கண்டெடுக்கப்பட்டனர். அதை தொடர்ந்து இரு பிரிவினர் இடையேயான மோதல் தீவிரமடைந்ததுடன், மணிப்பூர் முதலமைச்சர், எம்.எல்.ஏக்கள் வீடுகளுக்கும் போராட்டக்காரர்கள் தீ வைத்தனர்.
தொடர்ந்து மணிப்பூரில் வன்முறை தீவிரமடைந்து வருவதால் மகாராஷ்டிரா தேர்தல் பிரச்சாரத்தில் இருந்த அமித்ஷா, அதை ரத்து செய்துவிட்டு அங்கிருந்து டெல்லி திரும்பியுள்ளார். தொடர்ந்து அரசு அதிகாரிகள், ராணுவ அதிகாரிகளுடன் அமித்ஷா தீவிர ஆலோசனையில் ஈடுபட்டு வருகிறார். கலவரத்தை கட்டுப்படுத்த அமித்ஷா என்ன முடிவு எடுக்கப் போகிறார் என்று எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
Edit by Prasanth.K