பழங்குடியினர் படுகொலை- தர்ணாவில் ஈடுபட்ட பிரியங்கா காந்தி கைது- உ.பியில் பரபரப்பு

Webdunia
வெள்ளி, 19 ஜூலை 2019 (14:54 IST)
உத்தர பிரதேசத்தில் கலவரத்தில் இறந்து போன பழங்குடியினரின் குடும்பத்தை பார்க்க சென்ற பிரியங்கா காந்தி கைது செய்யப்பட்டுள்ள விவகாரம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

உத்தர பிரதேசம் சோன்பத்ரா அருகே உள்ள கிராமத்தில் கடந்த 17ம் தேதி நடந்த கலவரத்தில் 10 பேர் சுட்டுக்கொல்லப்பட்டனர். 36 ஏக்கர் நிலபரப்பில் வாழ்ந்து வந்த விவசாய பழங்குடி மக்களை அக்கிராமத்தின் தலைவர் யோகா தத் வெளியேற சொன்னதால் இரு தரப்பினருக்குமிடையே மோதல் ஏற்பட்டது. இதனால் யோகா தத் நூற்றுக்கும் அதிகமானவர்களோடு வந்து துப்பாக்கிகளால் பழங்குடியின மக்களை சுட்டு தள்ளியுள்ளார். இதில் மூன்று பெண்கள் உட்பட 10பேர் உயிரிழந்தனர். மேலும் பலர் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இந்த சம்பவம் அறிந்து இறந்தவர்களின் குடும்பங்களை சந்தித்து ஆறுதல் கூற உத்தர பிரதேசம் சென்றுள்ளார் பிரியங்கா காந்தி. ஆனால் அவரை கிராமத்திற்குள் செல்ல விடாமல் போலீஸார் தடுத்துள்ளனர். இதனால் அந்த இடத்திலேயே அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார் பிரியங்கா காந்தி. உடனடியாக அவரை போலீஸார் கைது செய்து அழைத்து சென்றனர்.

இந்த சம்பவம் உத்தர பிரதேசத்தில் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. இது குறித்து ராகுல் காந்தி தனது ட்விட்டரில் “சோன்பத்ராவிற்கு சென்ற பிரியங்கா காந்தி கைது செய்யப்பட்டது சரியல்ல. நிலத்திற்காக போராடிய 10 பழங்குடிகள் இரக்கமின்றி கொல்லப்பட்ட்ருக்கிறார்கள். பாதிக்கப்பட்ட குடும்பத்தினரை பார்க்க போனவரை கைது செய்திருக்கிறார்கள். இது உத்தர பிரதேசம் பாதுகாப்பற்ற மாநிலமாக இருக்கிறது என்பதையே காட்டுகிறது” என்று பதிவிட்டுள்ளார். மேலும் அதில் பிரியங்கா காந்தி கைது செய்யப்பட்ட வீடியோவையும் இணைத்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்