பணத்துக்கு நாங்க கேரண்ட்டி: பயனர்களை சமாதானப்படுத்தும் பேடிஎம்!!

Webdunia
வெள்ளி, 18 செப்டம்பர் 2020 (17:02 IST)
கூகுள் ப்ளே ஸ்டோரிலிருந்து திடீர் நீக்கம் குறித்து பேடிஎம் நிறுவனம் விளக்கம் அளித்துள்ளது. 
 
இந்தியாவில் பண பரிவர்த்தனைக்கு அதிகம் பயன்படுத்தப்படும் அப்ளிகேசனான பேடிஎம் கூகுள் ப்ளே ஸ்டோரிலிருந்து திடீரென நீக்கப்பட்டுள்ளது. இந்தியாவை தலைமையகமாக கொண்டு உருவாக்கப்பட்டுள்ள இந்த பேடிஎம் அப்ளிகேசன் பல மில்லியன் மக்களால் பண பரிவர்த்தனைக்கு பயன்படுத்தப்பட்டு வருகிறது.
 
இந்நிலையில் கூகிள் சட்டத்திட்டங்களை மீறி செயல்பட்டதாக பேடிஎம் மீது நடவடிக்கை எடுத்துள்ள கூகிள் தனது ப்ளே ஸ்டோரிலிருந்து பேடிஎம் அப்ளிகேசனை நீக்கியுள்ளது. சூதாட்டம் தொடர்பான செயல்பாடுகளில் ஈடுபட்டதால் நீக்கப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது. 
 
இது பேடிஎம் பயனாளர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அதேசமயம் பேடிஎம் நிறுவனத்தின் மற்ற ஆப்களான பேடிஎம் மால், பேடிஎம் மியூச்சுவல் பண்ட் போன்ற அப்ளிகேசன்கள் வழக்கம் போல செயல்பட்டு வருகின்றன.
 
இதனிடையே இந்த திடீர் நீக்கம் குறித்து பேடிஎம் நிறுவனம் விளக்கம் அளித்துள்ளது. அதாவது, வாடிக்கையாளர்களின் பணம் பாதுகாப்பாக இருக்கும் எனவும் ஏற்கனவே செயலியை பயன்படுத்தி வருவோருக்கு எந்த பாதிப்பும் ஏற்படாது எனவும் தெரிவித்துள்ளது. 
 
மேலும், கூகுள் ப்ளே ஸ்டோரில் பேடிஎம் செயலியை புதிதாக டவுன்லோடு செய்யவோ, அப்டேட் செய்யவோ முடியாது. தற்காலிகமாக நீக்கப்பட்டுள்ள பேடிஎம் செயலி ப்ளே ஸ்டோரில் மீண்டும் சேர்க்கப்படும் எனவும் கூறப்பட்டுள்ளது. 

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்