ஜனசேனா கட்சியின் 12ஆவது ஆண்டு விழா ஐதராபாத்தில் சிறப்பாக நடைபெற்ற நிலையில் இதில் கலந்து கொண்ட பவன் கல்யாண், "இந்தியாவுக்கு இரண்டு மொழிகள் மட்டும் போதாது; தமிழ் உட்பட பல மொழிகள் அவசியம். நம் தேசத்தின் ஒருமைப்பாட்டை காக்கவும், மக்கள் இடையே அன்பும் ஒற்றுமையும் வளர்ச்சியடையவும், மொழி வேற்றுமையை புரிந்து கொண்டே ஆக வேண்டும். பல மொழிகள் இருப்பது நாட்டின் வளத்தை அதிகரிக்கும். இந்த கொள்கை தமிழ்நாடு உள்ளிட்ட அனைத்து மாநிலங்களுக்கும் பொருந்தும் என்று கூறியிருந்தார்.
மேலும், சிலர் சமஸ்கிருதத்தை ஏன் விமர்சிக்கிறார்கள் என்பதை நான் புரிந்து கொள்ள முடியவில்லை. தங்களது திரைப்படங்களை அதிக வருமானத்திற்காக இந்தியில் டப்பிங் செய்யும் அதே நேரத்தில், தமிழக அரசியல்வாதிகள் இந்தியாவுக்கு எதிராக பேசுகிறார்கள். பாலிவுட்டிலிருந்து பணம் எதிர்பார்க்கிறார்கள், ஆனால் இந்தியா என்ற எண்ணத்தை ஏற்க மறுக்கிறார்கள். இது எந்த விதமான தர்க்கம்?" என்று கருத்து தெரிவித்தார்.
பவன் கல்யாணின் இந்த பேச்சுக்கு பதிலளித்த நடிகர் பிரகாஷ் ராஜ், தனது எக்ஸ் பக்கத்தில், "இந்தி மொழியை எங்களிடம் திணிக்க வேண்டாம் என்பதற்கான கோரிக்கை, அந்த மொழியை வெறுப்பதால் அல்ல. அது, எங்கள் தாய் மொழியையும், நம் பாரம்பரியத்தையும் பெருமையுடன் காக்க விரும்புவதற்காக. இதை யாராவது பவன் கல்யாணிடம் சொல்லுங்கள்" என்று பதிவு செய்துள்ளார்.