இன்டெர்நெட் முடக்கம்; முன்னாள் முதல்வர்கள் ஹவுஸ் அரஸ்ட்... காஷ்மீரில் நடப்பது என்ன??

Webdunia
திங்கள், 5 ஆகஸ்ட் 2019 (08:42 IST)
காஷ்மீரில் உருவாகியுள்ள பதற்றமான சூழ்நிலையை கட்டுக்குள் கொண்டுவர இணைய சேவை முடக்கம், 144 தடை உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது. 
 
அமர்நாத் யாத்திரையை குறிவைத்து பாகிஸ்தான் தாக்குதல் நடத்த இருபதாக உளவுத்துறை எச்சரித்ததையடுத்து பாகிஸ்தானில் கூடுதல் ராணுவ படைகள் குவிக்கப்பட்டது. மேலும் ஜம்மு காஷ்மீர் மாநிலத்தை மூன்றாக பிரிக்க மத்திய அரசு திட்டமிட்டு உள்ளதாக வெளியான தகவல் பரபரப்பை கூட்டியது. 
 
இந்நிலையில், ஜம்முவில் நேற்று நள்ளிரவு முதல் இணையம் மற்றும் தொலைபேசி சேவைகள் துண்டிக்கப்பட்டுள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன. அதோடு, பல்வேறு பகுதிகளில் 144 தடை உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது. 4 பேருக்கு மேல் கூடக்கூடாது, கூட்டங்கள் பேரணிகள் நடத்தக்கூடாது என தடை விதிக்கப்பட்டுள்ளது.
பள்ளிகள், கல்லூரிகள் தனியார் கல்வி நிறுவனங்களுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. மறு உத்தரவு வரும் வரை இந்த விடுமுறை தொடரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 
 
மேலும், காஷ்மீர் முன்னாள் முதல்வர்கள் உமர் அப்துல்லா, மெஹ்பூபா முப்தி,  மக்கள் மாநாட்டுக் கட்சித் தலைவர் சஜத் லோன் ஆகியோர் நள்ளிரவு முதல் வீட்டுக் காவலில் வைக்கப்பட்டுள்ளனர். 
அனைவரும் பாதுகாப்பாக இருக்குமாறும் அமைதி காக்கும்படியும் உமர் அப்துல்லாவும், ஒற்றுமையுடன் இருந்து உரிமைக்காக தொடர்ந்து போராடுவோம் என்றும் மெஹ்பூபா முப்தி டிவிட்டர் மூலம் தெரிவித்துள்ளார். 
 
இவ்வாறு காஷ்மீரில் நடப்பது என்னவென புரியாமல் மக்கள் தவித்து வரும் நிலையில் பிரச்சனையில் இருந்து பாதுகாக்க 40 கம்பெனி துணை ராணுவப் படைகள் குவிக்கப்பட்டு பலத்த கண்காணிப்பு மற்றும் பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்