மும்பையில் இருந்து ஒரு விமானமும் பறக்க முடியாது. மத்திய அரசுக்கு எச்சரிக்கை விடுத்த சிவசேனா

Webdunia
வியாழன், 6 ஏப்ரல் 2017 (21:38 IST)
கடந்த சில நாட்களுக்கு முன்னர் சிவசேனா எம்பி ரவிந்திர கெய்க்வட் ஏர் இந்தியா விமானத்தில் தனக்கு முதல்வகுப்பு இருக்கை ஒதுக்கவில்லை எனக் கூறி, நிர்வாகிகளிடம் சண்டையிட்டதோடு, ஏர் இந்தியா நிறுவன மேலாளரை செருப்பால் அடித்தார். இந்த விவகாரம் பெரும் பிரச்சனை ஆகி, சிவசேனா எம்பி மன்னிப்பு கேட்கும் வரை அவர் எந்த விமானத்திலும் பயணம் செய்ய முடியாது என்று மத்திய  விமானப் போக்குவரத்து அமைச்சகம் உத்தரவிட்டது.


 


ஆனாலும், மன்னிப்பு கேட்க முடியாது என்று கெய்க்வட் அடம் பிடித்தார். இந்த நிலையில் இன்று மக்களவையில் பேசிய அவர், 'எனது செயலில் தவறு இருந்தால் இங்கே மன்னிப்பு கேட்டுக் கொள்கிறேன். ஏர் இந்தியா நிறுவனத்திடம் கேட்கமாட்டேன். அந்த நிறுவன அதிகாரி தவறாகப் பேசியதால், நானும் தவறாக நடக்க நேரிட்டது' என்று கூறினார்.

இந்நிலையில் கெய்க்வாட்டுக்கு ஆதரவாக கோஷமிட்ட சிவசேனா எம்பிக்கள், அவர் மீதான தடையை நீக்காவிட்டால் மும்பையில் இருந்து ஒரு விமானம் கூட பறக்க முடியாது என்றும் மும்பை விமான நிலையத்தை கைப்பற்றுவோம் என்றும் மிரட்டல் விடுத்தனர். இதனால் மக்களவை பரபரப்பு ஏற்பட்டது.
அடுத்த கட்டுரையில்