புதிய 2 ஆயிரம் ரூபாய் நோட்டும் விரைவில் செல்லாது? - வங்கி அதிகாரி அதிர்ச்சி தகவல்

Webdunia
புதன், 25 ஜனவரி 2017 (18:29 IST)
மத்திய அரசு புதிதாக அறிமுகப்படுத்தியுள்ள 2 ஆயிரம் ரூபாய் நோட்டும் செல்லாது என அறிவிக்கும் வாய்ப்பிருப்பதாக வங்கி அதிகாரி ஒருவர் கூறியுள்ள தகவல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


 

 
கருப்பு பணத்தை ஒழிக்கும் பொருட்டு மக்களிடம் உள்ள பழைய 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என கடந்த வருடம் நவம்பர் மாதம் 8ம் தேதி பிரதமர் மோடி அறிவித்தார். அதேபோல் மக்கள் தங்களிடம் உள்ள ரூபாய் நோட்டுகளை வங்கிகளில் செலுத்தி, புதிய ரூபாய் நோட்டுகளைப் பெற்றுக் கொள்ள வேண்டும் என வலியுறுத்தப்பட்டது.
 
இந்த விவகாரம் நாடெங்கும் உள்ள மக்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியது. மேலும், கடந்த 2 மாதங்களாக, தங்களுக்கு தேவையான பணத்தை ஏ.டி.எம் மற்றும் வங்கிகளில் எடுக்க முடியாமல் திணறி வந்தனர். 
 
இந்நிலையில், அகில இந்திய ஸ்டேட் வங்கி அதிகாரிகள் சங்க தலைவர் தாமஸ் பிராங்கோ திருச்சியில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் பேசியதாவது:
 
பணமதிப்பு குறைப்பு நடவடிக்கை குறித்து பணக்காரர்களுக்கு முன் கூட்டியே தெரிந்துள்ளது. பிரதமர் மோடி கூறுவது போல் இதில் எந்த ரகசியமும், கட்டுப்பாடும் இல்லை. 25 சதவீத சிறு தொழில் முனைவோர் வேலை வாய்ப்பை இழந்துள்ளனர். தவறான கொள்கையை செயல்படுத்தி தற்போது மத்திய அரசு சிக்கி தவிக்கிறது. 
 
மத்திய அரசின் இந்த நடவடிக்கையை கண்டித்து மத்திய பாதுகாப்பு தொழிற்துறை சங்கங்கள் நாடு முழுவதும் 28ம் தேதி ஆர்ப்பாட்டமும், 31ம் தேதி மனித சங்கிலி போராட்டம் நடத்த திட்டமிட்டுள்ளன. 
 
மேலும், வருகிற மார்ச் 31ம் தேதிக்குள், தற்போது அறிமுகப்படுத்திய புதிய 2 ஆயிரம் ரூபாய் நோட்டும் செல்லாது என மத்திய அரசு அறிவிக்க வாய்ப்பிருக்கிறது. ஏனேனில், ரிசர்வ் வங்கிக்கு எந்த அதிகாரமும் இல்லாமல் போய்விட்டது” என அவர் தெரிவித்தார்.
அடுத்த கட்டுரையில்