விதிமுறைகளை மீறிய பிரதமர் மோடி?: கேள்விகளை தொடுத்த வக்கீல்!

Webdunia
வியாழன், 10 நவம்பர் 2016 (10:46 IST)
தற்போது புழக்கத்தில் உள்ள 500, 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது எனவும் கையில் உள்ள அந்த பணத்தை வங்கியில் கொடுத்து புதிய 500, 2000 ரூபாய் நோட்டுகள் பெறலாம் என பிரதமர் மோடி 8-ஆம் தேதி இரவு அறிவித்தார்.


 
 
இந்த அறிவிப்புக்கு வரவேற்பும், எதிர்ப்பும் சேர்ந்தே வருகின்றன. பிரதமர் மோடியின் இந்த திடீர் அறிவிப்புக்கு எதிர்ப்பு தெரிவித்த மக்கள் போதிய கால அவகாசம் தரவில்லை என குற்றம் சாட்டினர்.
 
மேலும் இந்த அறிவிப்பை ரிசர்வ் வங்கியின் கவர்னர் தான் அறிவிக்க முடியும், பிரதமர் மோடி இதனை அறிவித்தது முறையல்ல என விமர்சிக்கப்பட்டது. இதனையடுத்து நெல்லையில் உள்ள பிரம்மா என்ற வழக்கறிஞர் ஆர்.டி.ஐ. மூலம் பல்வேறு கேள்விகளை கேட்டு, பிரதமர் மோடிக்கு குடைச்சலை ஏற்படுத்தியுள்ளார்.
 
அதன் விவரம் கீழே:-
 
* ரூபாய் நோட்டுகள் செல்லாது என பிரதமர் எந்த அடிப்படையில், எந்த சட்டத்தின் கீழ் அறிவித்துள்ளார் என்பதன் விவரம் தர வேண்டும்.
 
* ரூபாய் நோட்டுக்களானது ரிசர்வ் வங்கி கவர்னரால் கையொப்பமிட்டு நாட்டு மக்களின் பயன்பாட்டுக்கு வழங்கப்பட்டுள்ளது. அவ்வாறு வழங்கப்பட்ட ரூபாய் நோட்டுகள் செல்லாது என பிரதமர் அறிவிப்பதற்கு எந்த சட்டத்தில் வழிவகை செய்யப்பட்டது அதன் விவரம் தர வேண்டும்.
 
* ரூபாய் நோட்டுகள் செல்லாது என பிரதமர் தலைமையிலான அமைச்சரவைக் கூட்டத்தில் கொள்கை முடிவு எடுக்கப்பட்டு அந்த முடிவானது ரிசர்வ் வங்கி கவர்னர் அவர்களுக்கு பரிந்துரை செய்யும் அதிகாரம் மட்டுமே பிரதமருக்கு வழங்கப்பட்டுள்ளது எனில் மேற்படி ரூபாய் நோட்டுகள் செல்லாது என அறிவித்த பிரதமருக்கு எந்த அடிப்படையில் எந்த சட்டத்தின் கீழ் அனுமதி வழங்கப்பட்டுள்ளது என்ற விவரம் தர வேண்டும்.
 
* ரூபாய் நோட்டுகள் மக்கள் பயன்பாட்டில் உள்ளதை பிரதமர் தடை செய்து உத்தரவிட்டதை ரிசர்வ் வங்கி கவர்னர் எந்த அடிப்படையில் அந்த உத்தரவினை ஏற்பளிப்பு செய்தார் என்ற விவரம் தர வேண்டும்.
 
* ரூபாய் நோட்டுகள் தடை செய்யப்பட்டது தொடர்பாக என்னென்ன கோப்புகளில் பிரதமர் அவர்கள் கையொப்பமிட்டு ரிசர்வ் வங்கி கவர்னருக்கு அனுப்பியுள்ளார் அந்த கோப்புகளின் நகல் தர வேண்டும்.
 
* ரூபாய் நோட்டுகள் தடை செய்யப்படுவதற்கு கவர்னர் ஒப்புதல் அளித்து கையொப்பமிட்ட உத்தரவின் நகல் தர வேண்டும்.
 
* ரூபாய் நோட்டுகள் மக்கள் பயன்பாட்டில் உள்ளதை தடை செய்யும் அதிகாரம் சட்டத்தில் யார், யாருக்கெல்லாம் வழங்கப்பட்டுள்ளது என்ற விவரம் தர வேண்டும்.
 
* இந்த அறிவிப்பானது பிரதமரால் நாட்டு மக்களுக்கு எத்தனை மணிக்கு எந்த தேதியில் தொலைக்காட்சி மூலம் தெரியப்படுத்தப்பட்டது என்ற விவரமும், தொலைக்காட்சி மூலம் நாட்டு மக்களுக்கு பிரதமர் மேற்படி ரூபாய் தொடர்பாக அறிவித்த அறிவிப்பின் சி.டி நகல் தர வேண்டும்.
 
* அறிவிப்பு வெளியிடப்பட்ட 4 மணி நேரத்தில் 500 ரூபாய் மற்றும் 1000 ரூபாய் செல்லாது என மக்களுக்கு ஏற்பட்ட கஷ்ட, நஷ்டங்களுக்கு எடுக்கப்பட்ட முன்எச்சரிக்கை நடவடிக்கைகள், ஏற்பாடுகள் என்னென்ன என்ற அதன் தொடர்பான ஆவண நகல் தர வேண்டும்.
 
* அறிவிப்பு வெளியிடப்பட்ட உடன் மக்கள் என்னென்ன சிரமங்கள் மேற்கொண்டர்கள் என்பதை பற்றிய உளவுத்துறை மற்றும் நுகர்வோர் அமைப்புகள், பத்திரிகைகள் பதிவு செய்த சிரமங்கள் பற்றிய விவரங்கள் குறிப்பாணைகள் ஆவணங்களின் நகல் தர வேண்டும்.
 
* ரூபாய் நோட்டுக்கள் மக்களிடமிருந்தும் பயன்படுத்த முடியாத நிலையிலும் பொருட்கள் வாங்க முடியாத நிலையிலும் சிரமப்பட்டுள்ளார்கள். எனில் அதனால் நுகர்வோருக்கு ஏற்பட்ட மனஉளைச்சலுக்கு நஷ்டஈடு வழங்க வேண்டுமெனில் புகார் யார் மீது கொடுக்க வேண்டும் என்ற விவரம் தர வேண்டும்.
 
* அறிவிப்பினை பிரதமர் அறிவித்திருப்பது விளம்பரம் தேடும் யுக்தியாக மக்களை ஏமாற்றும் செயலில் தன்னிச்சையாக பிரதமர் செயல்பட்டுள்ளார் எனில் புகார் மனு யாரிடம் கொடுக்க வேண்டும் என்ற விவரம் மற்றும் அவர்களின் முகவரி தர வேண்டும்.
 
* அறிவிப்பினை கால அவகாசம் கொடுத்து அறிவிக்கப்பட்டு இருந்தால் 9.11.2016 அன்று இந்தியா முழுவதும் உள்ள வங்கிகளுக்கு விடுமுறை விட வேண்டிய அவசியம் ஏற்பட்டு இருக்காது. இது வங்கியில் கணக்கு வைத்துள்ள நுகர்வோருக்கு மிகப்பெரிய பாதிப்பையும் பொதுமக்களுக்கு மிகப் பெரிய இடையூறையும் செய்யும் நோக்கில் பிரதமர் செயல்பட்டுள்ளார் எனில் அவர் மீது நடவடிக்கை எடுக்க புகார் மனு யாரிடம் கொடுக்க வேண்டும் அதன் முகவரி தர வேண்டும்.
 
* ரூபாய் நோட்டுகள் செல்லுபடி ஆகாது என்று இந்தியா சுதந்திரமடைந்த பின்னர் பிரதமராக இருந்த முராஜிதேசாய் எந்த தேதியில் எந்த ஆண்டு அறிவித்தார் என்ற விவரம் தர வேண்டும்.
 
* முன்னாள் பிரதமர் முராஜிதேசாய் எந்தெந்த ரூபாய் நோட்டுகள் செல்லாது என தடை செய்யப்பட்டது. அவ்வாறு அறிவிக்கப்பட்ட போது என்னென்ன நடைமுறைகள் விதிமுறைகள் கடைபிடிக்கப்பட்டது என்ற விவரம் தர வேண்டும்.
 
* முன்னாள் பிரதமரின் அறிவிப்பின்போது ரிசர்வ் வங்கி கவர்னராக பணிபுரிந்த அதிகாரியின் பெயர் மற்றும் தடை செய்யப்பட்ட பணம் தொடர்பாக அதாவது பணம் செல்லாது என அறிவிக்கப்பட்ட நிலையில் என்னென்ன விதிமுறைகளை ரிசர்வ் வங்கி கவர்னர் பின்பற்றியுள்ளார் அதன் தொடர்பான ஆவணங்களை கோப்புகள் அனைத்தும் தர வேண்டும்.
 
இதனால், பிரதமர் மோடியின் அமைச்சகம் இந்த கேள்விகளுக்கு பதில் அளிப்பது தொடர்பான ஆலோசனையில் ஈடுபட்டுள்ளனர்.
அடுத்த கட்டுரையில்