சென்னை போலீஸ் நிலையத்தில் திருநங்கை தீக்குளித்து மரணம் ; திருநங்கைகள் போராட்டம்

Webdunia
வியாழன், 10 நவம்பர் 2016 (10:22 IST)
சென்னை, தில்லை நகர் காவல் நிலையத்தில் திருநங்கை ஒருவர் தீ குளித்து தற்கொலை செய்து கொண்டார். ஆனால், அவர் மரணத்தில் மர்மம் இருப்பதாக கூறி திருநங்கைகள் போராட்டம் நடத்திய விவகாரம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


 

 
சென்னை சூளைமேடு பகுதியை சேர்ந்த திருநங்கை தாரா(28). இவர் நேற்று அதிகாலை 4 மணியளவில், தி.நகர், பாண்டிபஜார் வழியாக தனது இரு சக்கர வாகனத்தில் வந்து கொண்டிருந்தார். அப்போது அங்கிருந்த போலீசார் அவரை தடுத்து நிறுத்தி, காவல் நிலையம் அழைத்துச் சென்றனர். 
 
அதன்பின், அவர் காவல் நிலைய வளாகத்திற்குள் தீக்காயங்களுடன் மீட்கப்பட்டு, போலீசார் அவரை ஆம்புலன்ஸ் உதவியுடன் கீழ்பாக்கம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். ஆனால், சிகிச்சை பலனின்றி அவர் மரணமடந்தார்.
 
இதுகேள்வி பட்டு கொதித்தெழுந்த சூளைமேடு பகுதி திருநங்கைகள், பாண்டிபஜார் காவல்நிலையம் முன்பு குவிந்து, தாராவின் மரணத்தில் மர்மம் இருப்பதாக கூறி போராட்டம் நடத்தினர். 
 
மது போதையில் இருந்த தாராவை, காவல் நிலையம் அழைத்து வந்து போலீசார் விசாரித்ததாகவும், அதனால் மனமுடைந்த தாரா, அருகில் எங்கேயோ சென்று பெட்ரோல் வாங்கி வந்து காவல் நிலையம் முன்பு தீக்குளித்து விட்டார் என்று போலீசார் தரப்பில் கூறப்பட்டது.
 
ஆனால் அதை அரவாணிகள் ஏற்கவில்லை. இதுபற்றி ஒரு திருநங்கை கூறும்போது ‘தாராவுக்கு மது பழக்கமே கிடையாது.  மிகவும் நல்லவள். எல்லோரிடமும் இனிமையாக பழகக்கூடியவள். காஞ்சனா என்ற திருநங்கையை தத்து எடுத்து வளர்த்து வருகிறாள். போலீஸ் அதிகாரிகள், அவளை பிடித்து, பாலியல் தொழில் செய்கிறாயா? குடித்துவிட்டு வருகிறாயா? என்று இழுத்து சென்று சித்ரவதை செய்துள்ளனர். 
 
மேலும், அவளிடமிருந்த இரு சக்கர வாகனம் மற்றும் செல்போன்களை பறித்துக் கொண்டனர். ஆனால், அவர்களிடம் கெஞ்சிக் கூத்தாடி செல்போனை மட்டும் வாங்கிய அவள், திருநங்கைகள் இணைப்பாளரான கிரேஸி பானுவிடம் போன் செய்து, போலீசார் தன்னை பிடித்து வைத்து, தன்னிடம் தவறாக நடந்து கொள்வதாகவும், தன்னை காப்பாற்றுமாறு கூறி அழுதுள்ளார். 
 
உடனே நாங்கள் அனைவரும் ஒன்று கூடி அங்கு சென்றோம். ஆனால், காவல் நிலையத்தின் முன்பு அவர் பெட்ரோல் ஊற்றி தற்கொலை செய்து கொண்டார் என்று போலீசார் கூறினர். அதன் பின் மருத்துவமனைக்கு சென்றோம். ஆனால் அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். இதில் மர்மம் இருக்கிறது” என்று கூறினர்.
 
காவல் நிலையம் முன்பு திருநங்கை ஒருவர் தற்கொலை செய்து கொண்ட விவகாரம் திருநங்கைகள் மத்தியில் கொதிப்பை ஏற்படுத்தியுள்ளது.
அடுத்த கட்டுரையில்