எல்லை தாண்டி மீன் பிடித்ததாக தமிழக மீனவர்கள் அவ்வப்போது இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்படும் நிலையில், மியான்மர் மீனவர்கள் நான்கு பேர் இந்திய எல்லையில் மீன் பிடித்ததாக கைது செய்யப்பட்டு இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
இந்திய எல்லையில் சந்தேகத்திற்கு இடமான இடத்தில் பாய்மர கப்பல் நின்று கொண்டிருந்த நிலையில், அந்த கப்பலை நோக்கி கடற்படை வீரர்கள் சென்ற போது அதில் நான்கு மீனவர்கள் இருந்தனர்.
உடனே பாய்மர கப்பலை சுற்றிவளைத்து சோதனை செய்த நிலையில், அவர்களிடம் விசாரணை நடத்தப்பட்டது.
விசாரணையின் முடிவில், மியான்மர் நாட்டை சேர்ந்த 4 பேரும் மீனவர்கள் என்றும், எல்லை தாண்டி இந்திய எல்லையில் மீன் பிடித்ததும் தெரிய வந்தது.
இதனை அடுத்து நான்கு பேரையும் கைது செய்து நாகப்பட்டினம் துறைமுகத்திற்கு அழைத்து வந்து விசாரணை செய்யப்பட்டு வருகிறது.
இந்திய கடல்சார் மண்டலங்கள் சட்டத்தின் பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும், இதனை அடுத்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு உள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளன.
மேலும், அவர்கள் வந்த பாய்மர கப்பல் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.