சிறையில் கொசுக்கடி இருப்பதை நிரூபிக்க கொசுக்களை டப்பாவில் அடைத்து பிரபல தாதா நீதிமன்றத்திற்கு கொண்டு வந்த சம்பவம் வைரலாகியுள்ளது.
மும்பை தொடர் குண்டி வெடிப்பு சம்பவம் உள்ளிட்ட பல குற்ற செயல்களில் தொடர்புடையவர் பிரபல தாதா தாவூத் இப்ராஹிம். இவருடன் தொடர்புடைய பல தாதாக்கள் கைது செய்யப்பட்டு வந்த நிலையில் கடந்த 2020ம் ஆண்டு மும்பை காவல்துறையால் கைது செய்யப்பட்டவர் தாதா இஜாஜ் லக்டாவாலா.
இவர் தற்போது மும்பையில் உள்ள தலோஜா சிறையில் உள்ளார். இவர் சமீபத்தில் மும்பை அமர்வு நீதிமன்றத்தில் மனு ஒன்றை தாக்கல் செய்துள்ளார். அதில் சிறையில் கொசுத்தொல்லை அதிகம் இருப்பதாகவும், ஆனால் சிறை காவலர்கள் அவருடைய கொசுவலையையும் பறித்துக் கொண்டதாகவும், தனக்கு கொசுவலை வழங்க வேண்டும் எனவும் கேட்டிருந்தார்.
இதற்கு சிறை துறை தரப்பில் அளிக்கப்பட்ட விளக்கத்தில் சிறை தண்டனை பெற்றவர்கள் கொசுவலையை கொண்டு தற்கொலை செய்யும் ஆபத்து உள்ளதால் கொசுவலைக்கு அனுமதி மறுத்துள்ளதாக தெரிவித்துள்ளனர். இந்நிலையில் இதுகுறித்த விசாரணைக்காக நீதிமன்றம் அழைத்து வரப்பட்ட தாதா இஜாஜ் ஒரு டப்பா முழுக்க கொசுக்களை அடைத்து எடுத்து வந்து நீதிபதிகள் முன்னர் காட்டி முறையிட்டுள்ளார்.
இந்த வழக்கில் சிறை துறை கொசுக்களை ஒழிக்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென உத்தரவிட்ட நீதிமன்றம், தாதா இஜாஜுக்கு கொசுவலை தர முடியாது என்றும், அவர் வேண்டுமானால் ஓடாமஸ் போன்ற கொசுவை விரட்டக்கூடிய மருந்தை தடவிக் கொள்ளலாம் என்றும் அனுமதி அளித்துள்ளனர்.