குரங்கு அம்மை தொற்று குறித்து பொதுமக்களிடையே தேவையற்ற அச்சம் ஏற்படுவதை தடுக்க வேண்டியது அவசியம் என மாநில அரசுகளுக்கு மத்திய சுகாதாரத்துறை அறிவுறுத்தியுள்ளது.
மங்கி பாக்ஸ் என்று அழைக்கப்படும் குரங்கு அம்மை நோய் ஆப்பிரிக்க நாடுகளில் வேகமாக பரவி வருகிறது. குரங்கு அம்மை விலங்குகளிலிருந்து மனிதர்களுக்கு பரவக்கூடிய வைரஸ் தொற்று ஆகும். இந்த நோய் பாதிப்பு இருந்தால் காய்ச்சல், தசைகளில் வலி, பெரிய கொப்புளங்கள் போன்ற காயம் உள்ளிட்டவை ஏற்படும்.
இந்தியாவில் குரங்கு அம்மை தொற்றால் ஒருவர் பாதிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அவர் சமீபத்தில் ஆப்ரிக்க நாடுகளுக்கு பயணம் செய்திருந்த நிலையில் அதன் மூலம் இந்த தொற்று பரவியிருக்க வாய்ப்புள்ளதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
இந்நிலையில், குரங்கு அம்மை தொற்று பாதிப்பை உன்னிப்பாக கவனித்து வருகிறோம் என மாநில அரசுகளுக்கு மத்திய சுகாதாரத்துறை கடிதம் எழுதி உள்ளது. மேலும் அந்த கடிதத்தில், குரங்கம்மை நோய் ஏற்பட்டால் உயிரிழப்பை தடுப்பதற்கு நடவடிக்கைகளை தீவிர படுத்த வேண்டும் என்று மத்திய அரசு கேட்டுக் கொண்டுள்ளது.
மாவட்ட மருத்துவமனைகளில் சுகாதார துறை அதிகாரிகள் ஆய்வு மேற்கொள்ள வேண்டும் என்றும் நோய் தொற்று இருப்பதாக சந்தேகிக்கப்படும் நபர்கள் மீது தனி கவனம் செலுத்த வேண்டும் என்றும் அறிவுறுத்தி உள்ளது. மேலும் மருத்துவமனைகளில் தனிமைப்படுத்தும் வசதிகளை ஆய்வு செய்ய வேண்டும் என்று தெரிவித்துள்ளது.
மருத்துவமனைகளில் தேவையான உபகரணங்கள், மருந்துகள் கை இருப்பில் உள்ளதா என்பதை ஆய்வு செய்ய வேண்டும் என்று அறிவுறுத்தி உள்ள மத்திய அரசு, குரங்கு அம்மை நோய் சூழலை உன்னிப்பாக கண்காணித்து வருவதாக கூறியுள்ளது.