பிரிக்ஸ் மாநாட்டில், பயங்கரவாதிகளுக்கு ஆதரவாக செயல்படும் பாகிஸ்தானை தனிமைப்படுத்தும் விதமாக ரஷிய, சீன அதிபர்களுடன் பிரதமர் மோடி பேச்சுவார்த்தை நடத்துகிறார்.
பிரிக்ஸ் நாடுகளின் இரண்டு நாள் மாநாடு இன்று பனாஜி நகரில் தொடங்குகிறது. பிரேசில், ரஷியா, இந்தியா, சீனா, தென் ஆப்பிரிக்கா ஆகிய 5 நாடுகளைக் கொண்ட அமைப்பு ‘பிரிக்ஸ்’ ஆகும்.
முதல் நாளான இன்று பிரிக்ஸ் மற்றும் இந்தியா, வங்காளதேசம், பூடான், மியான்மர், நேபாளம், இலங்கை, தாய்லாந்து ஆகிய நாடுகள் அடங்கிய வங்கக் கடல் பகுதியில் பல்துறை தொழில் நுட்பம் மற்றும் பொருளாதார ஒத்துழைப்புக்கான ‘பிம்ஸ்டெக்’ அமைப்பு மாநாடு நடக்கிறது.
இதைத்தொடர்ந்து பிரிக்ஸ் நாடுகளின் தலைவர்கள் பங்கேற்கும் உச்சி மாநாடு நாளை (ஞாயிற்றுக்கிழமை) நடக்கிறது. இந்தியத் தலைமையின் கீழ் நடைபெறும் இந்த மாநாட்டில் பிரதமர் மோடி, ரஷிய அதிபர் விளாடிமீர் புதின், சீன அதிபர் ஜின்பிங், பிரேசில் ஜனாதிபதி மைக்கேல் தெமர், தென் ஆப்பிரிக்க ஜனாதிபதி ஜேக்கப் ஜூமா ஆகியோர் பங்கேற்கின்றனர்.
பிரிக்ஸ் மாநாட்டின் இடையே புதின், ஷின்பிங் ஆகியோரை மோடி சந்தித்து இருநாடுகள் உறவுகள் குறித்து பேச்சுவார்த்தை நடத்துகிறார். அப்போது காஷ்மீரின் உரி ராணுவ முகாமில் பாகிஸ்தான் ஆதரவு பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தியது பற்றி மோடி எடுத்துக் கூறி பாகிஸ்தானை தனிமைப்படுத்துவதற்கும் முயற்சி மேற்கொள்கிறார்.
பாகிஸ்தானின் நெருங்கிய நாடாக திகழ்ந்து வரும் சீனா, அதன் பயங்கரவாத ஆதரவு செயல்களை கண்டு கொள்ளாமல் இருப்பதும், அண்மைக்காலமாக பாகிஸ்தான் பக்கமாக ரஷியா சாய்ந்து வரும் நிலையிலும், மோடி இந்த இரு நாடுகளின் தலைவர்களையும் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்துகிறார்.