’ஜெயலலிதா நீதிமன்றம் சென்று போராடியது உண்மை’ - தமிழிசை சவுந்தரராஜன் ஓபன் டாக்

Webdunia
சனி, 15 அக்டோபர் 2016 (13:28 IST)
ஜெயலலிதா காவிரி பிரச்சனையில் உச்சநீதிமன்றம் வரை சென்று போராடி தண்ணீர் பெற்று தந்தது உண்மைதான் என்று தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் கூறியுள்ளார்.
 

 
இது குறித்து சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடத்தில் பேசிய தமிழிசை, “காவிரி விவகார பிரச்சனை உச்சநீதிமன்றத்தில் இருக்கிறது. மத்திய அரசு சட்ட திட்டத்துக்கு உட்பட்டுதான் அணுக முடியும். தமிழக மக்களுக்கு நீதி கிடைக்கும் என்பதில் நாங்கள் உறுதியாக இருக்கிறோம். மத்திய அரசு தகுந்த நடவடிக்கை எடுத்து வருகிறது.
 
திமுக, காங்கிரஸ் இன்று காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பதற்கு என்ன நடவடிக்கை எடுத்தாலும் அது அரசியல் காரணத்துக்காகத்தான் என்பதை துணிச்சலாக சொல்கிறேன்.
 
இன்றைய கால கட்டத்தில் திமுக அனைத்து கட்சி கூட்டத்தை கூட்டி என்ன செய்ய போகிறார்கள்? தமிழக அரசு அனைத்து கட்சி கூட்டத்தை கூட்டினால் பாஜக அதில் பங்கேற்கும். திமுக அனைத்து கட்சி கூட்டத்தை கூட்டினால் பா.ஜனதா கலந்து கொள்ளாது” என்றார்.
 
மேலும் அவர் கூறுகையில், “முதலமைச்சர் ஜெயலலிதா உடல் நலக்குறைவால் மருத்துவமனையில் இருக்கிறார். அவர் காவிரி பிரச்சனையில் உச்சநீதிமன்றம் வரை சென்று போராடி தண்ணீர் பெற்று தந்தது உண்மைதான்.
 
மத்திய அரசு கண்டிப்பாக காவிரி நதிநீர் பிரச்சனையில் தமிழகத்துக்கு நல்லது செய்யும். காவிரி மேலாண்மை வாரியம் விரைவில் அமைக்கப்படும்” என்றார்.
அடுத்த கட்டுரையில்