மகாராஷ்டிராவில் தனது வங்கி கணக்கில் தவறுதலாக செலுத்தப்பட்ட தொகையை பிரதமர் அனுப்பிய பணம் என நினைத்து விவசாயி வீடுகட்டிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மகராஷ்டிரா மாநிலம் பிம்பல்வாடி கிராம பஞ்சாயத்தில் வளர்ச்சி பணிகளை மேற்கொள்ள அரசு ரூ.15 லட்சம் நிதி ஒதுக்கியுள்ளது. இந்த பணத்தை பஞ்சாயத்து கணக்கில் செலுத்தவதற்கு பதிலாக தவறாக பைதான் தாலுகாவில் வசிக்கும் விவசாயி ஞானேஷ்வர் ஓட் என்பவரது கணக்கில் செலுத்தப்பட்டுள்ளது.
பிரதமர் மோடி அறிவித்த பணம்தான் தனக்கு கிடைத்துள்ளதாக நினைத்து மகிழ்ச்சியடைந்த ஞானேஷ்வர், பிரதமர் மோடிக்கு நன்றி தெரிவித்து கடிதம் எழுதியதுடன், அதிலிருந்து ரூ.9 லட்சத்தை எடுத்து ஒரு மாடி வீடும் கட்டியுள்ளார். இவையெல்லாம் கடந்த ஆண்டு ஆகஸ்டிலேயே நடந்துள்ளன. அரசிடமிருந்து பஞ்சாயத்திற்கு பணம் வராமல் இருக்கவே தற்போது பஞ்சாயத்து முறையிட்ட நிலையில் அதுகுறித்து ஆய்வு செய்தபோது வங்கி கணக்கில் மாற்றி பணம் அனுப்பப்பட்டது தெரிய வந்துள்ளது.
மீதமிருந்த ரூ.6 லட்சத்தை வங்கி எடுத்துக் கொண்டதுடன் ரூ.9 லட்சத்தை திரும்ப கட்டுமாறு ஞானேஷ்வருக்கு வங்கி நோட்டீஸ் அனுப்பியுள்ளது.