மதுபான கொள்கை வழக்கில் விசாரணைக்கு ஆஜராகுமாறு டெல்லி போக்குவரத்து துறை அமைச்சர் கைலாஷ் கெலாட்டுக்கு அமலாக்கத்துறை முதல் முறையாக சம்மன் அனுப்பியுள்ளது.
டெல்லி 32 மண்டலங்களாகப் பிரிக்கப்பட்டு 849 சில்லறை விற்பனை நிலையங்களுக்கு மதுபானம் விற்பனை செய்ய உரிமம் வழங்கப்பட்டது. இந்த உரிமம் வழங்கியதில் முறைகேடு நடந்ததாகவும், ரூ. 100 கோடி கைமாறியதாகவும் புகார் எழுந்தது.
இதையடுத்து, டெல்லியில் மதுபான கொள்கை வகுத்ததில் முறைகேடு நடந்ததாகக் கூறி சிபிஐ மற்றும் அமலாக்கத் துறை வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறது.
விசாரணையில் டெல்லி முன்னாள் துணை முதலமைச்சராக இருந்த மணீஷ் சிசோடியா, ஆம் ஆத்மி மாநிலங்களவை உறுப்பினர் சஞ்சய் சிங் உள்ளிட்டோர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.
கடந்த 21 ஆம் தேதி டெல்லி முதலமைச்சரும், ஆம் ஆத்மி தேசிய ஒருங்கிணைப்பாளருமான அர்விந்த் கெஜ்ரிவாலை அமலாக்கத்துறை கைது செய்தது. கெஜ்ரிவால் கைது செய்யப்பட்டதை கண்டித்து டெல்லி உள்பட நாடு முழுவதும் அவரது ஆதரவாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.