நாட்டின் முதல் பெண் ஐபிஎஸ் அதிகாரியும், பாஜக தலைவர்களில் ஒருவருமான கிரண் பேடி புதுச்சேரி மாநிலத்தின் துணை நிலை ஆளுநராக நியமிக்கப்பட்டுள்ளார். இதற்கான உத்தரவை குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி அறிவித்தார்.
புதுச்சேரி மாநில துணைநிலை ஆளுநராக இருந்த வீரேந்திர கட்டாரியா கடந்த 2014-ஆம் ஆண்டு ஜூலை மாதம் 12-ஆம் தேதி நீக்கப்பட்டார். இதுவரை நியமிக்கப்படாத இந்த பதவிக்கு தற்போது கிரண் பேடி நியமிக்கப்பட்டுள்ளார். முன்னதாக அந்தமான்-நிகோபார் தீவுகளின் துணைநிலை ஆளுநர் அஜய் சிங் கூடுதல் பொறுப்பாக புதுச்சேரியை கவனித்து வந்தார்.
தற்போது புதுச்சேரி துணை நிலை ஆளுநராக நியமிக்கப்படுள்ள கிரண் பேடி இது குறித்து தனது மகிழ்ச்சியை தெரிவித்துள்ளது. மத்திய அரசின் இந்த முடிவைக் கண்டு மகிழ்ச்சியடைகிறேன். என் மீது அவர்கள் வைத்துள்ள நம்பிக்கையை இது காட்டுகிறது என்றார் அவர்.
மிஸோரம், கோவா, சண்டீகர் ஆகிய பகுதிகளில் ஐபிஎஸ் அதிகாரியாக பணியாற்றினேன் ஆனால், அந்தமான் மற்றும் புதுச்சேரியில் பணியாற்ற எனக்கு வாய்ப்பு கிடைக்கவில்லை. எனவே, புதுச்சேரி துணைநிலை ஆளுநராக நியமிக்கப்பட்டிருப்பதை எனக்கு கிடைத்த சிறந்த வாய்ப்பாக பார்க்கிறேன் என்றார் கிரண் பேடி.