சுங்கச்சாவடியில் கட்டணம் கேட்டதால் கடுப்பான டிரைவர் அந்த சுங்கச்சாவடியையே புல்டோசர் கொண்டு இடித்த சம்பவம் உத்தர பிரதேசத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
உத்தர பிரதேசத்தில் கடந்த சில ஆண்டுகளில் புல்டோசர் கலாச்சாரம் பெருகிவிட்டது. அங்கு பாஜகவின் யோகி ஆதித்யநாத் ஆட்சி நடந்து வரும் நிலையில் முந்தைய காலங்களில் ஏதேனும் பரபரப்பான குற்ற வழக்குகளில் ஈடுபட்ட நபர்களை தண்டிக்கும் விதமாக அவர்களது வீடுகள் புல்டோசர் கொண்டு இடிக்கப்பட்டன. அதுபோல தற்போது ஒரு சுங்கச்சாவடியையே ஒரு நபர் புல்டோசர் கொண்டு இடித்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
உத்தரபிரதேசம் மாநிலம் ஹாபூர் பகுதியில் சிஜார்சி சுங்கச்சாவடி செயல்பட்டு வருகிறது. அந்த டோல்கேட் வழியாக புல்டோசர் ஒன்று சென்றுள்ளது. அதற்கு சுங்க கட்டணம் கட்டும்படி சுங்கச்சாவடி ஊழியர்கள் கூறியதற்கு அந்த புல்டோசர் டிரைவர் கட்டணம் செலுத்து மறுத்துள்ளார். கட்டணம் செலுத்தாவிட்டால் சுங்கச்சாவடியை கடந்து போக முடியாது என ஊழியர்களும் கூறியுள்ளனர்.
இதனால் ஆத்திரமடைந்த டிரைவர் அங்கேயே தனது புல்டோசரை இயக்கி டோல் ப்ளாசாவை அடித்து உடைக்க தொடங்கியுள்ளார். இதனால் சுங்கச்சாவடி ஊழியர்கள் அலறியடித்துக் கொண்டு ஓடியுள்ளனர். இந்த சம்பவத்தை அங்கிருந்தவர்கள் வீடியோவாக எடுத்த நிலையில் தற்போது இது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இதுகுறித்து போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வரும் நிலையில் புல்டோசரும், டிரைவரும் தலைமறைவாகி விட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.