பீகார் அரசியலில் உச்சகட்ட பரபரப்பு..- ராஜினாமா செய்கிறாரா நிதிஷ் குமார்?.

Senthil Velan
சனி, 27 ஜனவரி 2024 (13:20 IST)
பீகார் முதல்வர் நிதிஷ் குமார் ராஷ்டிரிய ஜனதா தள கட்சியுடனான கூட்டணியிலிருந்து விலகி, பாஜக ஆதரவுடன் மீண்டும் முதல்வராக பதவி ஏற்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
 
பீகார் மாநிலத்தில் நிதிஷ் குமார் தலைமையிலான ஐக்கிய ஜனதா தளம், ராஷ்டிரிய ஜனதா தளம் கூட்டணி ஆட்சி உள்ளது. மேலும் இந்தியா கூட்டணியிலும் ஐக்கிய ஜனதா தளம் உள்ளது. கடந்த சில மாதங்கள் வரை, இந்தியா கூட்டணியின் ஒருங்கிணைப்பாளர் ஆவதற்கு வாய்ப்பிருக்கும் தலைவர்களின் பட்டியலில் இடம்பெற்றிருந்த நிதிஷ் குமார், ஒருங்கிணைப்பாளர் பதவி கிடைக்காத விரக்தியில் இருந்து வருகிறார் என்று கூறப்படுகிறது.
 
இந்நிலையில் ராஷ்டிரிய ஜனதாதளம் கூட்டணியிலிருந்து விலகி பாஜகவுடன் இணைந்து பீகாரில் ஆட்சி நடத்தவும் நிதிஷ் குமார் முயன்று வருவதாகக் தகவல் வெளியாகி உள்ளது. அடுத்த வாரம் கூட்டணி மாறி புதிய அமைச்சரவை பதவியேற்க வாய்ப்பிருப்பதாகவும் கூறப்படுகிறது.
 
இந்நிலையில் ஐக்கிய ஜனதா தளம், பாரதிய ஜனதா கட்சி, ராஷ்ட்ரிய ஜனதா தளம் பாட்னாவில் தொடர் ஆலோசனையில் ஈடுபட்டுள்ளது. இதேபோல் டெல்லியில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தலைமையில் ஆலோசனை நடைபெற்று வருகிறது. 
 
ராஜினாமா செய்தபின் பாஜக ஆதரவுடன் நிதிஷ்குமார் மீண்டும் முதலமைச்சராக பதவியேற்பார் என தகவல் வெளியாகியிருக்கிறது. இதனால் பீகார் அரசியலில் உச்சகட்ட பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

ALSO READ: தொடர் விடுமுறை எதிரொலி.! குமரி, கோவையில் இருந்து சென்னைக்கு சிறப்பு ரயில்கள்..
 
ஏற்கனவே நிதிஷ் குமார் பாஜக கூட்டணியில் இருந்து வந்தார். 2022-ம் ஆண்டு பாஜகவிலிருந்து வெளியேறி, ராஷ்டிரிய ஜனதா தளத்துடன் கூட்டணி அமைத்து பீகாரில் ஆட்சியமைத்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்