கிரிப்டோகரன்சி மூலம் அதிக பணம் சம்பாதிக்கலாம் என்று ஆசை வார்த்தை கூறி பெண் மருத்துவரிடம் ரூபாய் 30 லட்சம் மோசடி செய்துள்ள சம்பவம் மகாராஷ்டிரா மாநிலத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள பெண் மருத்துவர் ஒருவரிடம் கடந்த சில நாட்களுக்கு முன் தாய்லாந்தில் இருந்து பேசுவதாக ஒரு அழைப்பு வந்தது. அந்த அழைப்பில் கிரிப்டோகரன்சி வாங்குவதன் மூலம் அதிகமாக சம்பாதிக்கலாம் என்று ஆசை வார்த்தை கூறியுள்ளதாக தெரிகிறது.
இதை நம்பிய அந்த பெண் மருத்துவர் தானும் கிரிப்டோகரன்சி வாங்குவதாக பதில் அளித்து அந்த நபர் கூறிய வங்கி கணக்கிற்கு பணம் அனுப்பி உள்ளார். ஆகஸ்ட் 2ஆம் தேதி முதல் ஆகஸ்ட் 6ஆம் தேதி வரை அவர் சில வங்கி கணக்கு 30 லட்சத்திற்கும் அதிகமாக பணம் அனுப்பிய நிலையில் பணத்தை பெற்றுக் கொண்ட நபர் கிரிப்டோகரன்சி வாங்கி தரவில்லை என தெரிகிறது.
இதையடுத்து அந்த நபரை மொபைல் போனில் தொடர்பு கொண்டபோது சுவிட்ச் ஆப் செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியானது. இதனை அடுத்து தான் ஏமாந்து விட்டோம் என்பதை உணர்ந்த பெண் மருத்துவர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். இந்த புகாரின் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்த காவல்துறை மோசடி செய்தவரை தேடி வருவதாக கூறப்படுகிறது.