நொய்டாவை சேர்ந்த தனியார் நிறுவனம் "தென்னிந்தியர்கள் விண்ணப்பிக்க தகுதி இல்லை" என்று வேலைவாய்ப்பு விளம்பரத்தில் குறிப்பிட்டுள்ளது. இது பெரும் சர்ச்சையாகியுள்ளது.
நொய்டாவை மையமாக கொண்டு இயங்கும் தனியார் நிறுவனம் சமீபத்தில் வேலை வாய்ப்பு விளம்பரம் ஒன்றை வெளியிட்டது. அந்த விளம்பரத்தில் "தென்னிந்தியர்கள் விண்ணப்பிக்க தகுதி இல்லை" என்று வெறுப்புணர்வை காட்டியதற்கு தென்னிந்தியாவை சேர்ந்த பலர் கண்டனங்களை பதிவு செய்து வருகின்றனர்.
உத்தரபிரதேச மாநிலம் நொய்டாவில் உள்ள மௌனி கன்சல்டிங் சர்வீஸ் என்ற நிறுவனம் வெளியிட்ட இந்த விளம்பரத்திற்கு கடும் எதிர்ப்புகள் தெரிவிக்கப்படுவதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. அந்த விளம்பரத்தில், டேட்டா அனலிஸ்ட் என்ற பதவிக்கு நான்கு ஆண்டுகள் அனுபவம் மற்றும் தொழில்நுட்ப தகுதி வேண்டும் என்று கூறியதுடன், ஹிந்தி மொழியை நன்றாக பேசவும் படிக்கவும் தெரிந்தவர்கள் மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும் என்றும் தென்னிந்தியர்கள் விண்ணப்பிக்க தகுதி இல்லை என்றும் வெளிப்படையாக குறிப்பிட்டுள்ளனர்.
இந்த விளம்பரத்திற்கு ஆதரவாக, ஹிந்தி பேசும் மக்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர். ஹிந்தி மிகவும் அவசியம் என்றும் தென்னிந்தியர்கள் ஹிந்தி பேச முடியாதவர்கள் என்றும் கருத்துகளை பதிவு செய்து வரும் அதே நேரத்தில், தென்னிந்தியர்கள் இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.
"சொந்த நாட்டுக்குள்ளேயே ஒரு பகுதியில் உள்ள இந்தியர்களை வேலைக்கு தகுதி இல்லை என்று கூறுவது நியாயமா?" என்று கேள்வி எழுப்பி, விளம்பரத்தை வெளியிட்ட நிறுவனத்தின் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் பலர் வலியுறுத்தி வருகின்றனர். இதுகுறித்து உத்தரபிரதேச அரசு என்ன நடவடிக்கை எடுக்கும் என்பதை பொறுத்திருந்து பார்க்க வேண்டும்.