மராட்டிய மாநிலத்தில் 12 வயது சிறுவர்கள் பத்திரிக்கையாளர்களை நேரில் சந்தித்து அவர்களின் புத்தக சுமை குறித்து பேட்டியளித்தனர்.
மராட்டிய மாநிலம் சந்திராபூர் மாவட்டத்தில் உள்ள வித்யா நிகேதன் பள்ளியில் படிக்கும் இரண்டு மாணவர்கள் நேற்று பத்திரிக்கையாளர்கள் சங்கத்துக்கு சென்றனர்.
அங்கு அந்த 12 வயது சிறுவர்கள், தங்களது பரிதாப நிலை பற்றி கொஞ்சம் வெளியுலகுக்கு சொல்ல வேண்டும் என கூறியுள்ளனர். இதைக்கேட்டு அங்கிருந்தவர்கள் அதிர்ச்சியடைந்தனர்.
பின்னர் கேமிராக்கள் முன்னர் அமர்ந்து பேட்டியளித்தனர். அவர் கூறியதாவது:-
நாங்கள் 8ஆம் வகுப்பு படிக்கின்றோம். நாங்கள் தினசரி 16 புத்தகங்களையும், துணைப் பாட நூல்களையும் நாங்கள் எடுத்து செல்ல வேண்டியுள்ளது. சுமார் 7 எடைக்கொண்ட புத்தக சுமையை தினமும் எங்களால் சுமக்க முடியவில்லை.
புத்தகப் பைகளை சுமந்தப்படி, பள்ளியின் மூன்றாவது மாடியில் உள்ள வகுப்பறைக்கு ஏறிச் செல்வதற்குள் போது, போதும் என்றாகிவிடுகிறது.
இந்த புத்தக சுமை குறித்து எங்கள் பள்ளியின் முதல்வருக்கு பலமுறை புகார்கள் அளித்தோம். ஆனால், இதுவரை எந்த முன்னேற்றமும் இல்லை. அதனால்தான் பத்திரிக்கையாளர்களின் மூலமாக இந்த விவகாரத்தை மேலிடத்தின் கவனத்துக்கு கொண்டு செல்ல விரும்பி இங்கு வந்துள்ளோம், என்று கூறியுள்ளனர்.
பத்திரிக்கையாளர்கள் அந்த சிறுவர்களிடம், இந்த பேட்டியால் பள்ளி நிர்வாகம் உங்கள் மீது நடவடிக்கை எடுத்தால் என்ன செய்வீர்கள்? என்று கேட்டுள்ளனர். அதற்கு அந்த சிறுவர்கள், அதுபற்றி நாங்கள் யோசிக்கவில்லை, எங்களது கோரிக்கையை நிறைவேற்ற உண்ணாவிரதம் இருக்கவும் தயங்க மாட்டோம், என்றனர்.