இந்துக்கள் ஒன்றுபடா விட்டால் ஆபத்து என்று மற்ற மாநிலங்களில் பாஜக கூறுவது போல் மகாராஷ்டிராவில் கூறினால் அந்த தந்திரம் பலிக்காது என அஜித் பவர் தேர்தல் பிரச்சார மேடையில் கூறியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மகாராஷ்டிரா மாநிலத்தில் நவம்பர் 20ஆம் தேதி தேர்தல் நடைபெற இருக்கும் நிலையில், பாஜக மற்றும் காங்கிரஸ் தலைமையிலான இரண்டு கூட்டணிகள் நேருக்கு நேர் களத்தில் உள்ளன.
தேர்தல் பிரச்சாரம் தற்போது சூடு பிடித்துள்ள நிலையில், இஸ்லாமியர்கள் மற்றும் சிறுபான்மையினர் மீது வெறுப்பை உண்டுபண்ணும் பிளவுவாத அரசியல் யுத்தியை பாஜக தொடர்ந்து செய்து வருவதாக எதிர்க்கட்சிகள் விமர்சனம் செய்து வருகின்றனர்.
இந்த நிலையில், மகாராஷ்டிரா துணை முதலமைச்சர் அஜித் பவர் இது குறித்து விமர்சனம் செய்த போது, இந்துக்கள் பிரிந்து இருந்தால் ஆபத்து என்ற பிரச்சார வழக்கத்தை பாஜக தீவிரப்படுத்தி வருகிறது, அது மகாராஷ்டிராவில் பலிக்காது," என தெரிவித்துள்ளார்.
மகாராஷ்டிராவில் பாஜகவின் இந்த தந்திரம் வேலைக்கு ஆகாது என்றும், உத்தரப்பிரதேசம், பீகார் போன்ற மாநிலங்களில் இவை வேலை செய்யலாம் என்றும் அவர் கூறினார். மகாராஷ்டிரா எப்போதும் மத நல்லிணக்கம் கொண்ட மாநிலம் என்றும், பாஜகவின் மதவாத கோஷங்களுக்கு செய்தித்தாள் விளம்பரம் கொடுத்து பிரமோஷன் செய்து வருகிறது என்றும், இதற்கு பாஜக கூட்டணியில் உள்ள கட்சி தலைவர்களே எதிர்ப்பு தெரிவித்து வருகிறார்கள் என்றும் அவர் தெரிவித்தார்.